2021, ஜூன் மாதம் கொரனோ கலகட்டத்தின்போது, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு இலவச ரேஷன் வழங்க மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், `மத்திய அரசு ஒரு போர்ட்டலை உருவாக்கி அதில் அனைத்து புலம்பெயர் தொழிலாளர்களைப் பதிவுசெய்து ரேஷன் கார்டு மற்றும் உணவுப்பொருள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என்றது. அதைத்தொடர்ந்து, அந்த ஆண்டு ஆகஸ்டில், புலம்பெயர் தொழிலாளர்கள், வீட்டுப் பணியாளர்கள் உள்பட அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத் திட்டங்கள், சமூகப் பாதுகாப்பு வழங்குதற்காக, மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் இ-ஷ்ரம் (eShram) போர்ட்டலைத் தொடங்கியது.
இது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் தற்போது தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இதில், கடந்த செப்டம்பர் 2-ம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, 2021-ன் தீர்ப்பின்படி புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதையடுத்து, நவம்பர் 26-ல் நடைபெற்ற விசாரணையின்போது, இலவசங்களை வழங்குவதில் உள்ள சிக்கல்களை அடிக்கோடிட்ட உச்ச நீதிமன்றம், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கிய கொரோனா காலகட்டம் முற்றிலும் வேறானது என்று குறிப்பிட்டது.
இந்த நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த், மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணை நடைபெற்றது. இதில், மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாடி ஆகியோர் ஆஜராகினர். மறுபக்கம், புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்னைகள் தொடர்பான அரசு சாரா அமைப்பின் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஆஜரானார்.
அப்போது, “புலம்பெயர் தொழிலாளர்கள் மத்திய அரசு வழங்கும் இலவச ரேஷனைப் பெறுவதற்கு ரேஷன் கார்டுகளை வழங்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் இந்த நீதிமன்றம் அவ்வப்போது உத்தரவு பிறப்பித்திருக்கிறது. எனவே, இ-ஷ்ரம் போர்ட்டலில் பதிவு செய்யப்பட்ட அனைத்து புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் இலவச ரேஷன் வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.” என்று வாதிட்டார்.
அதைத்தொடர்ந்து, “தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2013-ன் கீழ் 81 கோடி பேருக்கு இலவச ரேஷன் வழங்கப்படுகிறது.” என்று மத்திய அரசு குறிப்பிட்டது.
இதைக் கவனித்த உச்ச நீதிமன்ற அமர்வு, “அதாவது வரி செலுத்துபவர்கள் மட்டும் இதிலிருந்து விடுபட்டிருக்கின்றனர். இன்னும் எவ்வளவு காலத்துக்கு இலவசங்களை வழங்க முடியும்? இந்தப் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகள் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றை ஏன் உருவாக்கக்கூடாது?
புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவருக்கும் ரேஷன் வழங்குமாறு மாநிலங்களிடம் கூறினால், பல மாநிலங்கள் நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி தங்களால் முடியாது என்பார்கள். அதேசமயம், மக்களைத் திருப்திப்படுத்துவதற்காக அதே மாநிலங்கள் ரேஷன் அட்டைகளை வழங்கும். ஏனெனில், இலவச ரேஷன் வழங்குவதற்கான பொறுப்பு மத்திய அரசிடம் இருக்கிறதென்பதை அவர்கள் நன்கறிவார்கள். இதுதான் இங்கு பிரச்னை. இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கிடையே பிளவை உருவாக்க வேண்டாம்.” என்று குறிப்பிட்டு, அடுத்த விசாரணையை ஜனவரி 8-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.