வாரத்துக்கு 4 நாட்கள் வேலை: டோக்கியோ ஆளுநர் அறிவிப்புக்கான காரணம் என்ன?

கோப்புப்படம்: அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டோக்கியோ பெருநகர (மெட்ரோ) அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் நான்கு நாட்கள் பணி, மூன்று நாட்கள் விடுப்பு என்ற புதிய பணி அட்டவணை சார்ந்த கொள்கை திட்டத்தை டோக்கியோ கவர்னர் யூரிகோ கொய்கே அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான காரணம் குறித்து பார்ப்போம்.

உலகிலேயே அதிக மக்கள் வசிக்கும் நகரமாக ஜப்பான் தலைநகர் டோக்கியோ உள்ளது. அந்த நாட்டில் பிறப்பு விகிதம் சரிந்த காரணத்தால் மூத்த வயது மக்கள் அதிகம் வசிக்கும் நாடாகவும் உள்ளது.

இந்நிலையில், டோக்கியோ பெருநகர கூட்ட அமர்வில் பேசிய கவர்னர் யூரிகோ கொய்கே, “வேலை செய்யும் முறையை நாம் மறு ஆய்வு செய்ய வேண்டிய சூழலில் உள்ளோம். குழந்தை பிறப்பு மற்றும் பராமரிப்பு போன்ற காரணங்களால் யாரும் தங்கள் பணியை விட்டுக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.

தேசம் எதிர்கொண்டுள்ள இந்த சவாலான காலகட்டத்தில் நமது மக்களின் வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் மற்றும் பொருளாதாரத்தையும் பாதுகாத்து, அதை மேம்படுத்துவதும் அவசியம். அந்த வகையில் தேசத்துக்கு முன்மாதிரியாக டோக்கியோ முன்னின்று வழி நடத்த வேண்டிய நேரம் இது” என சொல்லியுள்ளார். இதனை ஜப்பான் நாட்டின் ஊடக நிறுவனங்கள் உறுதி செய்துள்ளனர்.

அதே போல தொடக்க கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் முன்கூட்டியே வேலை நேரத்தில் இருந்து செல்லும் புதிய கொள்கையும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்ட ஊழியரின் ஊதியம் பிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் கடந்த 2023-ல் 7.27 லட்சம் குழந்தைகள் மட்டுமே பிறந்தன. இந்த நிலையில் தான் குடும்ப மற்றும் பணி வாழ்க்கை குறித்து அங்கு பேசப்படுகிறது.

கடந்த 2022-ல் வாரத்தில் நான்கு நாட்கள் வேலை செய்யும் சூழல் குறித்து சர்வதேச அளவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் பங்கேற்ற ஊழியர்களில் 90 சதவீதம் பேர் அதற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். மேலும் 10-க்கு 9.1 என தங்கள் அனுபவத்தை ரேட் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.