31-03-2023 உடன் முடிவடைந்த ஆண்டிற்கான தமிழ்நாடு அரசு மீதான நிதி அறிக்கை, வரவு செலவு திட்ட மேலாண்மை, கணக்குகளின் தரம், நிதிநிலை அறிக்கைகளின் நடைமுறைகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்த சி.ஏ.ஜி (CAG) அறிக்கை இன்று (10-12-2024) வெளியிடப்பட்டிருக்கிறது. அறிக்கை வெளியிட்டதைத்தொடர்ந்து, சென்னை தேனாம்பேட்டையிலுள்ள மத்திய கணக்காயர் அலுவலகத்தில் முதன்மை கணக்காய்வுத் தலைவர் ஜெய்சங்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்சங்கர், “மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2022-23 காலகட்டத்தில் ரூ. 23,64,514 கோடி. இதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 14 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. 2022-23 ஆண்டு வருவாய் பற்றாக்குறை ரூ. 36,215 கோடியாக இருந்திருக்கிறது. இதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் 17 சதவிகிதம் குறைந்திருக்கிறது. அதாவது ரூ. 46,538 கோடியிலிருந்து ரூ. 36,215 கோடிக்கு வந்திருக்கிறது. பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் ரூ. 33,183.15 செலவு செய்யப்படவில்லை.
இதில், முதல் நான்கு இடங்களில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை ரூ. 2,816 கோடி, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை ரூ. 1,622 கோடி, முனிசிபல் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ரூ. 1,593 கோடி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ரூ. 1,375 கோடி நிதி செலவு செய்யவில்லை. திறமையான நிதி மேலாண்மை இல்லாத காரணத்தினால்தான் இவ்வளவு நிதி செலவுசெய்யப்படவில்லை என்பதை இதை வெளிப்படுத்துகிறது. அது சரிசெய்யப்பட வேண்டும். 2022-23ல் பூப்பெய்திய மகளிருக்கான சுகாதார நல்வாழ்வு திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட வரவு செலவு திட்ட ஒதுக்கீட்டில் 69.26 சதவிகிதத்தைத் தான் செலவு செய்திருக்கிறார்கள்.” என்று கூறினார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…