வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது என்பதால், இது தொடர்பில் தேவையற்ற பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ கேட்டுக்கொண்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (10) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை, பொருளாதார இலக்குகள் மற்றும் நாட்டின் தற்போதைய கையிருப்பு போன்றவற்றை நன்கு புரிந்து கொண்டு, நிதி அமைச்சின் நெருக்கமான கண்காணிப்பின் கீழ் இந்த வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில், பல்வேறு பிரச்சாரங்களை மேற்கொண்டு மக்களை தவறாக வழிநடத்துவதும், சங்கடப்படுத்துவதும் பொருத்தமற்றது என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கப்படும் என்றும், இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் வகை குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.