ஆஸ்திரேலிய வாழ் இந்தியரின் வங்கி கணக்கிலிருந்து ரூ.6.5 கோடியை வங்கி அதிகாரிகளே சுருட்டிய விவகாரம் தற்போது வெளிவந்துள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் பேகம்பேட்டையிலுள்ள ஆக்சிஸ் வங்கிக் கிளையில் பரிதோஷ் உபாத்யாய் என்ற ஆஸ்திரிலிய வாழ் இந்தியர் வங்கிக்கணக்கு வைத்துள்ளார். இவர் ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் தனது குடும்பத்தாருடன் வசித்து வருகிறார்.
இவர் தனது ஹைதராபாத் வங்கிக் கணக்கில் ரூ.6.5 கோடி வைத்திருந்தார். இதனை அவர் பல ஆண்டுகளாக எவ்வித பண பரிவர்த்தனையும் செய்யாமல் வைத்திருந்திருந்தார். இதனால், இப்பணத்தை எப்படியாவது கையாடல் செய்வதற்கு அந்த வங்கியை சேர்ந்த அதிகாரிகளே திட்டமிட்டனர். அதன்படி, ஆள்மாறாட்டம் செய்து, போலி காசோலைகள் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் சிறிது சிறிதாக ரூ.6.5 கோடியை சுருட்டி விட்டனர்.
இந்நிலையில், தனது பணம் முழுவதும் கையாடல் செய்யப்பட்டதை அறிந்த பரிதோஷ் உபாத்யாய், இது தொடர்பாக வங்கியில் புகார் அளித்தார். ஆனால் அதனை யாரும் கண்டுகொள்ள வில்லை என கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து அவர் ஹைதராபாத் பேகம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் நடத்திய விசாரணையில் அந்த வங்கியின் முன்னாள் வங்கி மேலாளர் ஸ்ரீதேவி ரகு, சீனியர் பார்ட்னர் வெங்கடரமணா பாசர்லா, சர்வீஸ் பார்ட்னர் சுரேகா சைனி, மூத்த துணை தலைவர் ஹரி விஜய் மற்றும் ஊழியர்கள் ஆள்மாறாட்டம் செய்து பணத்தை மோசடி செய்துள்ளனர். போலி காசோலைகளை பரிதோஷ் உபாத்யாய் பெயரில் வழங்கி, அதன் மூலம் சிறிது சிறிதாக ரூ. 6.5 கோடியை அவர்கள் கையாடல் செய்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அனைவரையும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.