`லக்கி பாஸ்கர்’ படத்தை பார்த்தவர்களுக்கு தற்போது எழுந்திருக்கும் கேள்வி, `நம்ம வாழ்க்கைல எப்போதான் இந்த மாதிரி ஆண்டனி வருவாங்க!’ என்பதுதான்.
அந்தளவிற்கு ஆழமானதொரு இடத்தை பார்வையாளர்களின் மனதில் இறுக்கமாக பிடித்திருக்கிறது அந்த ஆண்டனி கதாபாத்திரம். ஆண்டனி கதாபாத்திரம் வேறு ஏதவாது ஒரு தீய செயல்களின் பக்கத்திற்கு பாஸ்கர் வாழ்க்கையை கொண்டு சென்றுவிடும் என்பதுதான் படம் பார்க்கும்போது பலருடைய எதிர்பார்ப்பாக இருந்தது. அதிலிருந்து மாறுபட்டு கதாபாத்திரத்திரத்தை நேர்மறையாக கொண்டுச் சென்ற விதம் பலரையும் ஈர்த்திருக்கிறது. அந்த கதாபாத்திரத்தில் நடிகர் ராம்கி நடித்திருந்தார். `லக்கி பாஸ்கர்’ படத்திற்குப் பிறகு பாசிட்டிவிட்டியின் மறு உருவமாக தெரிகிறார் ராம்கி. அவரை சந்தித்துப் பேசினோம்.
‘படத்துக்கு கிடைச்ச வரவேற்பு எவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுக்குது?’
‘தியேட்டர் ரிலீஸ்ல ஹிட் அடிச்சது எனக்கு ரொம்பவே மகிழ்ச்சியைக் கொடுத்தது. தீபாவளி ரிலீஸுக்கான ரேஸ் ரொம்பவே பரபரப்பாக இருந்தது. அப்போ அமரன் திரைப்படமும் வெளியானது. அதன் பிறகு மவுத் டாக்ல படம் பார்க்க பலரும் வந்தாங்க. தினமும் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகமாகுச்சு. அப்புறம் வசூலும் அதிகரிக்க தொடங்குச்சு. படத்தை திரையரங்கத்துல அதிகமாக பார்த்துக் கொண்டாடினது இளைஞர்கள்தான். இப்போ ஓ.டி.டி ரிலீஸ்ல என்னுடைய ரசிகர்கள் அதிகமாக படத்தை பார்த்துக் கொண்டாடுறாங்க. முக்கியமாக மீம் கிரியேட்டர்ஸுக்கு நன்றி சொல்லணும். அவங்கதான் அந்த ஆண்டனி கதாபாத்திரம் பற்றி பல மீம்ஸ் போட்டு பிரபலப்படுத்துறாங்க. இந்த படத்தைப் பார்த்துட்டு பலருக்கும் `நம்ம வாழ்க்கைல இப்படியொரு ஆண்டனி வரமாட்டங்களா’னு பதிவு போடுறாங்க. ஒரு மொழி மட்டுமல்ல `லக்கி பாஸ்கர்’ 5 மொழிகளிலும் நல்ல ஹிட்டாகியிருக்கு. இந்த ஹிட்டுக்குப் பிறகு மலையாளத்துல ஆண்டனிக்கு குரல் கொடுத்தது இவரானு பதிவுலாம் போடுறாங்க. அப்படி ஒரு ஆழமான இடத்தை அந்த கதாபாத்திரம் பிடிச்சிருக்கு. இப்போ பல இடங்கள்ல இருந்து இந்த கதாபாத்திரத்துக்கு கால் பண்றாங்க. `ஹே நம்ம ஆளு பா இவரு’னு சொல்லி வரவேற்கிறாங்க.’
‘இப்போ சீனியர் நடிகரை வில்லனாக கொண்டு வர்றதுதான் டிரண்ட், நாங்களும் உங்க கதாபாத்திரம் அப்படி ஆகிடும்னுதான் நினைச்சோம். கதை கேட்டதும் உங்களுக்கு என்ன தோனுச்சு?’
‘இயக்குநர் வெங்கி எனக்கு கதை சொன்னாரு. முதல் பாதியை சொல்லி முடிச்சதும் நான் படத்துக்கு ஓகே சொல்லிட்டேன். அந்த ஒரு ஃபோன் கால்ல படம் அமைஞ்சது. எனக்கு பெரும்பான்மையான காட்சிகள் துல்கர் சல்மானோடதான் இருந்தது. மொத்தமாக 40 நாட்கள் படத்துல நடிச்சேன். படத்தினுடைய அத்தனை வேலைகளையும் குழு துல்லியமாக கையாண்டாங்க. அதை ஒரு ஆர்டிஸ்ட்டாக நான் ஃபீல் பண்ணேன். படம் கண்டிப்பாக நல்லா போகும்னு அப்போதே இயக்குநரை வாழ்த்தினேன். நினைச்ச மாதிரியே இப்போ ஹிட்!’
‘நம்ம வாழ்க்கைல ஆண்டனி எப்போ வருவார்? அதை நீங்க சொன்னால்தான் சரியாக இருக்கும்!’
‘ஆண்டனி மாதிரியானவங்க நண்பர்களாகவும் பிசினஸ் பார்டனராகவும் வருவாங்கனுதான் பலருக்கும் எதிர்பார்ப்பு இருக்கு. என்னோட வாழ்க்கைல ஒரே பெயருடைய நபர் பல தருணங்கள்ல வந்து எனக்கு வெளிச்சமாக இருந்திருக்காங்க. அந்த நபர் ஒரு தருணத்துல வந்து ஒரு நல்லது பண்ணுவார், அதே பெயருடைய நபர் கொஞ்ச நாளுக்குப் பிறகு இன்னொரு நற்செயலை பண்ணீட்டு போவார். ஒரு விஷயம் …ஆண்டனியை நாம தேடி போக வேண்டாம். அவராகவே கண்டிப்பாக நம்ம வாழ்க்கைக்கு வருவார். யதார்த்தமான வழியில என்னைக்காவது நிச்சயம் ஆண்டனி வருவார். ஆண்டனி பல வடிவங்கள்ல வரலாம். இப்போ நான் கார்ல போறேன். அப்போ முன்னாடி போகிற கார் கண்ணாடியில இருக்கிற வசனத்துல வரலாம். இல்லைனா நாம படிக்கிற புத்தகத்துல இரண்டு வரிகள்ல வரலாம்.’
‘துல்கர் சல்மானுடனான நட்பு பற்றி…’
‘இளமையான பாசமுள்ள தம்பி அவர். உண்மையை சொல்லணும்னா துல்கர் ரொம்பவே நேர்மையானவர். பணிவோடு பழகுவார். எனக்கு அவரோட அப்பாவையும் பிடிக்கும், இவரையும் பிடிக்கும். துல்கர் அமைதியாகவே இருப்பார். அந்த அமைதி எப்படினா…அவர் செட்க்கு வர்றது போறதுகூட தெரியாதுனா பார்த்துக்கோங்க. நான் 40 நாட்கள் ஷூட்டிங் போனேன்னு சொன்னேன்ல அப்போலாம் அவரோட செயல்களை நான் கவனிச்சிருக்கேன். சில சமயங்கள்ல அவர் ரீ டேக் வாங்கப்போகிறார்னா நாங்களெல்லாம் நிற்கிறோம்னு எங்ககிட்டையும் அதை சொல்லிட்டுதான் பண்ணுவார். முன்பு படங்களோட ஷூட்டிங் நடக்கும்போது பக்கத்து செட்ல அவங்க அப்பா மம்முட்டி சார் இருப்பார். அதே சமயம் மற்றொரு பக்கம் சிரஞ்சீவி சார் இருப்பார். சாப்பிடுறதுக்கு வெளில போவோம், வீட்டுல இருந்து கொண்டுவரும் சாப்பாட்டை பங்கிட்டு சாப்பிடுவோம். மம்முட்டி சார் ஒரு கார் ப்ரியர். அதே போலதான் துல்கரும்.’
‘மகாராஜா படத்துல தேனப்பன் சார் அவருடைய சலூனுக்கு உங்க பெயர்தான் வச்சிருப்பார், உங்க ரசிகராகவும் இருப்பார்…’
‘ஆமா பா….நான் அந்தப் படத்தைப் பார்த்துட்டு இயக்குநர் நித்திலன் சாமிநாதன்கிட்ட பேசினேன். அவரும் `சார் எங்க ஊர்ல அந்த மாதிரியான சலூன் கடைகள் இருக்கு. உங்க ஃபேன்ஸ் இருப்பாங்க’னு சொன்னாரு. எனக்கு அந்த விஷயம் ரொம்ப மகிழ்ச்சியைக் கொடுத்தது. அந்த திரைப்படமும் நெட்ஃபிளிக்ஸ்ல டாப்ல இருந்தது. இப்போ இந்த `லக்கி பாஸ்கர்’ திரைப்படமும் டாப்ல இருக்கு.’
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…