சிரியாவிலிருந்து 75 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு: லெபனான் வழியாக தாயகம் அழைத்துவர நடவடிக்கை

புதுடெல்லி: சிரிய கிளர்ச்சிக்குப் பின்னர் அங்கிருந்து முதல்கட்டமாக 75 இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். சிரிய தலைநகர் டமஸ்கஸ் மற்றும் லெபனான் தலைநகர் பெய்ரூட் நகரங்களில் இயங்கிவரும் இந்திய துணை தூதரகத்தின் முயற்சியின் மூலம் 75 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 44 பேர் ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர்களாவர். மீட்கப்பட்ட இந்தியர்கள் பத்திரமாக லெபனான் அழைத்துவரப்பட்டனர். அவர்கள் அங்கிருந்து விமானங்கள் மூலம் இந்தியா அழைத்துவரப்படுவார்கள் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியர்களுக்கு அறிவுரை: மேலும், சிரியாவில் உள்ள இந்தியர்கள் பத்திரமாக இருக்கும்படியும், டமஸ்கஸில் உள்ள இந்திய துணைத் தூதரகத்துடன் தொடர்பில் இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவசரமான சூழலில் இந்தியர்கள் +963 993385973 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். [email protected] என்ற இமெயில் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவில் நிலவும் சூழலை கூர்ந்து கவனித்து வருவதாகவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதிய இடைக்கால பிரதமர்.. இதற்கிடையில் சிரியாவின் புதிய இடைக்கால பிரதமராக முகம்மது அல் பஷீர் தேர்வு செய்யபப்ட்டுள்ளார். இவர் ஏற்கெனவே எச்டிஎஸ் படை கைப்பற்றி ஆட்சி செய்த சிரியா பகுதிகளுக்கு பிரதமராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிரியா பிரச்சினையின் பின்னணி: மத்திய கிழக்கு நாடான சிரியாவில் கடந்த 1971-ல் ராணுவ மூத்த தளபதியாக இருந்த ஹபீஸ் அல் ஆசாத் ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றினார். 29 ஆண்டுகள் சிரியா அதிபராக இருந்த அவர் 2000-ம் ஆண்டில் காலமானார். அவரது மகன் பஷார் அல் ஆசாத் கடந்த 2000 ஜூலை 17-ம் தேதி அதிபரானார். அவர் ஷியா பிரிவை சேர்ந்தவர் என்பதால், அவருக்கு எதிராக சன்னி முஸ்லிம்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

அதிபர் ஆசாத்துக்கு ஈரான், ரஷ்யா ஆதரவு அளித்தன. கிளர்ச்சி படைகளுக்கு துருக்கி, அமெரிக்கா ஆதரவு அளித்தன. கடந்த 2014-ல் சன்னி பிரிவைச் சேர்ந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத குழு சிரியாவின் பெரும் பகுதியை கைப்பற்றியது. அதிபர் ஆசாத் படைகள் கிளர்ச்சிப் படைகள் இடையிலான போர் பல ஆண்டுகள் நீடித்தது. இதில் சுமார் 3 லட்சம் பேர் உயிரிழந்தனர்.

பின்னர், ரஷ்யா, ஈரானின் ஆதரவால் அதிபர் ஆசாத்தின் கை ஓங்கி, ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் பிடியில் இருந்த பகுதிகள் மீட்கப்பட்டன. இந்த சூழலில் ரஷ்யா – உக்ரைன் போரை தொடர்ந்து, சிரியா அதிபர் ஆசாத்தின் ராணுவத்துக்கு ரஷ்யா, ஈரானின் ஆதரவு படிப்படியாக குறைந்தது.

கடந்த 1-ம் தேதி சிரியாவின் அலெப்போ நகரை கைப்பற்றியது. அடுத்தடுத்து பல்வேறு நகரங்களை கைப்பற்றிய எச்டிஎஸ் படை வீரர்கள் சிரிய தலைநகரைக் கைப்பற்றினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.