திரையுலகில் தனக்கென்று தனி இடத்தைப் பிடித்த நடிகைகளில் கீர்த்தி சுரேஷும் ஒருவர்.
மகாநதி, சாணி காயிதம் என கதைக்கும், நடிப்பிற்கும் முக்கியத்துவம் தரும் படங்களைத் தேர்ந்தெடுத்து தனது சிறந்த நடிப்பை வெளிபடுத்தியுள்ளார். ஜீவாவை வைத்து தமிழில் கீ (kee) படத்தை இயக்கிய இயக்குநர் காலீஸ் இயக்கத்தில், அட்லியின் தயாரிப்பில் இந்தியில் உருவாகியிருக்கும் ‘பேபி ஜான்’ (தெறி படத்தின் ரீமேக்) படத்தில் வருண் தவானுக்கு ஜோடியாக தற்போது நடித்திருக்கிறார்.
இப்படம் வரும் 25-ம் தேதி வெளியாக இருக்கிறது. இதனைதொடர்ந்து தமிழில் கண்ணிவெடி படத்திலும் நடித்து வருகிறார். இதனிடையே சமீபத்தில் அவருடைய ‘ரகு தாத்தா’ படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தின் புரொமோஷன் பணிகளில் கீர்த்தி சுரேஷ் ஈடுபட்டு வந்தார். அந்தவகையில் அவர் சினிமா விகடன் ப்ரஸ் மீட்டிலும் கலந்துகொண்டிருந்தார். அந்த ஈவன்டில் கீர்த்தி சுரேஷிடம் உங்களின் ஃபேவரட் உணவு எது என்று இட்லி, புட்டு, பிரியாணியுடன் ஒப்பிட்டு கேட்கப்பட்டது.
அதற்கு அவர் ‘தோசை’தான் என்னுடைய ஃபேவரட் என்று கூறியிருந்தார். இந்த ரீல்ஸ் வீடியோ அப்போதே சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில் அந்த ரீல்ஸ் வீடியாவை வைத்து யாஷ்ராஜ் முகதே என்ற பாடகர் ஒருவர் இந்தியில் பாடல் ஒன்றை மெட்டுகட்டி பாடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் அந்த ரீல்ஸ் வீடியோ மீண்டும் இணையத்தில் வைரலாகி இருக்கிறது. இந்த வீடியாவிற்கு கீழ் கீர்த்தி சுரேஷ் “இது எனக்குப் பிடித்த புதிய பாடலாக இருக்கும்” என்று பதிவிட்டிருக்கிறார்.