எலான் மஸ்க் 1998ம் ஆண்டு அளித்த ஒரு வீடியோ நேர்காணல் இணையத்தில் பரவியது. அதனை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “இதில் கிரேஸியான (Crazy) விஷயம் என்னவென்றால், இந்த மிகத் தெளிவான கணிப்பைக் கூறியதற்காக அவர்கள் என்னை பைத்தியம் என்று நினைத்தார்கள்” என எழுதியுள்ளார்.
அந்த வீடியோவில் இணையதளம் வருங்காலத்தில் எப்படி இருக்கப்போகிறது எனப் பேசியிருந்தார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் 26 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் கூறியவாறே இன்று உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது.
“இணையம் அனைத்து ஊடகங்களுக்குமான சிறப்பு தொகுப்பாக இருக்கும்” என எலான் மஸ்க் கூறியிருந்தார். செய்தித்தாள்களும், இதழ்களும் பரபரப்பாக விற்கப்பட்ட, தொலைக்காட்சிகளே எதிர்காலமாக பார்க்கப்பட்ட அந்த காலத்தில் யாரும் அவரது சிந்தனையை ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார்கள்தான்.
“இணையமே அனைத்து ஊடகங்களுக்குமான எரிபொருளாகவும் இறுதி நிலையாகவும் இருக்கும். அச்சு, ஒளிபரப்பு, விவாதங்கள் வானொலி… என தேவையான அனைத்து ஊடக வடிவங்களையும் ஒருவர் இணையத்தில் அணுக முடியும்” எனக் கூறியுள்ளார் மஸ்க்.
“மக்கள் எதைப் பார்க்கலாம் எப்போது பார்ப்பது என்பதையெல்லாம் அவர்களே முடிவு செய்துகொள்வார்கள். அது வானொலி, இதழ் அல்லது தொலைக்காட்சி என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்” என்றும் பேசியிருந்தார்.
“இணையம் அனைத்து பாரம்பரிய ஊடகங்களிலும் புரட்சியை உருவாக்கும்” என அறுதியிட்டுக் கூறினார் எலான்.
இன்று நாம் பொழுதுபோக்கு, செய்திகள், தகவல்கள் என அனைத்தையும் இணையத்தின் உதவியுடனே பார்க்கிறோம். நெட்ஃபிளிக்ஸ் போன்ற ஒளிபரப்பு தளங்கள் முதல் சமூக வலைதளங்கள் வரை எல்லாமும் இணையத்தில் இருக்கின்றன.
இணைய தளத்தின் முழுமையான திறனை உணர்ந்திருந்ததால்தான், மஸ்க்கே பின்னாளில் ஒரு இணையதள நிறுவனத்தை உருவாக்கினார். எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் உலகின் பல தொலைதூர இடங்களுக்கு அதிவேக இணைய வசதி வழங்குவதன் மூலம், உலகை இணைக்கிறது. ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுடன் போட்டிப்போடும் வகையில் விரைவில் இந்தியாவிலும் ஸ்டார்லிங்க் சந்தைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுறது.
இதே போல ஏ.ஐ துணையுடன் உருவாகும் வருங்கால உலகம் குறித்தும் சமீபத்தில் மஸ்க் பேசியிருந்தார். பாரம்பர்ய வேலைகள் அனைத்தையும் ஏ.ஐ மாற்றிவிடும் என்றவர், “நாம் யாருக்கும் எந்த வேலையும் இருக்காது” எனத் தெரிவித்தார்.
வேலை செய்வது கட்டாயமாக இல்லாமல் விருப்பமாக மாறும் என்றார். பொருட்களை உற்பத்தி செய்வதையும் சேவைகள் வழங்குவதையும் ரோபோக்களே பார்த்துக்கொள்ளும் என்றவர், மக்களுக்கு அரசாங்கங்களே நிலையான வருமானத்தை வழங்கும் என்ற “UHI” கான்செப்டைச் சுட்டிக்காட்டினார்.