பாரதியார் 143-வது பிறந்த நாள் விழா: எட்டயபுரத்தில் சிலைக்கு மாலை அணிவித்து ஆட்சியர் மரியாதை

கோவில்பட்டி: பாரதியாரின் 143-வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் பாரதி அன்பர்கள் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பாடல்களாலும் தனது கவிதைகளாலும் சுதந்திர போராட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய முண்டாசு கவி பாரதியாரின் 143-வது பிறந்தநாள் விழா அவர் பிறந்த மண்ணான எட்டயபுரத்தில் இன்று (டிச.11) காலை கொண்டாடப்பட்டது.

பாரதியார் மணிமண்டபத்தில் அரசு சார்பில் நடந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் கலந்துகொண்டு பாரதியாரின் முழு உருவ வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த பாரதியாரின் புகைப்படங்கள், ஆங்கிலம் மற்றும் தமிழ் கையெழுத்து பிரதிகள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டார். மேலும் மணிமண்டப வளாகத்தில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட பாரதி ஆவண காப்பகத்தை பார்வையிட்டார்.

தொடர்ந்து, பாரதியார் நினைவு இல்லத்துக்கு சென்று அங்கு உள்ள மார்பளவு பாரதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கோட்டாட்சியர் க.மகாலட்சுமி, பேரூராட்சி தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன், தமாகா வடக்கு மாவட்ட தலைவர் கே.பி.ராஜகோபால், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞரின் சங்கத்தைச் சேர்ந்த பால புரஸ்கர் விருது பெற்ற எழுத்தாளர் க.உதயசங்கர், எழுத்தாளர்கள் நாறும்பூநாதன், சாரதி, மாவட்டச் செயலாளர் சங்கரலிங்கம், மாவட்ட தலைவர் ராமசுப்பு, மார்க்சிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர் ரவீந்திரன் மற்றும் பாரதி அன்பர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

டிஜிட்டல் நூலகம்: மாவட்ட ஆட்சியரிடம் தமாகாவினர் வழங்கிய மனுவில், மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் படைப்புகளை இளைய தலைமுறை முழுமையாகவும், ஆழமாகவும் உணர்ந்து கொள்ளும் வகையில், தேசத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து எட்டயபுரம் வருகை தரும் இலக்கிய ஆளுமைகள், பாரதி அன்பர்கள், தமிழ் ஆர்வலர்கள், ஆய்வு மாணவர்கள் மகாகவி பாரதியார் குறித்தும், அவரது உலகளாவிய பார்வை, லட்சியம் குறித்தும் முழுமையான ஆய்வுகள் மேற்கொள்ளும் வகையிலும் பாரதி பிறந்த எட்டயபுரத்து மண்ணில் அவரது மணிமண்டபம் அமைந்துள்ள பகுதியில் பெரிய அளவில் ஒரு டிஜிட்டல் நூலகம் அமைக்கப்பட வேண்டும். இலக்கிய ஆளுமைகள் தங்கி இருந்து ஆய்வுகள் மேற்கொள்ளும் வகையில் ஒரு இயற்கையான, ஒரு பசுமையான சூழலை மணிமண்டப வளாகத்தில் ஏற்படுத்தித் தர வேண்டும், என தெரிவித்தனர். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உறுதி அளித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.