காட்டு யானைகளால் ஏற்படும் சேதங்களைத் தடுத்து யானை- மனித மோதலைக் குறைப்பதற்கான உடனடி தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பிற வனவிலங்குகளால் மக்களுக்கும் பயிர்களுக்கும் ஏற்படும் சேதங்களுக்கு அறிவியல் முறையில் தீர்வுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுற்றாடல் அமைச்சர் டொக்டர் தம்மிக பட்டபெந்தி தெரிவித்தார்.
பொலன்னறுவை மாவட்டத்தில் வனவிலங்கு பிரச்சினைகள் குறித்து கலந்தரையாடி அதற்கான தீர்வுகளை வழங்குவதற்காக நேற்று (10) நடைபெற்ற விசேட கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,
பொலன்னறுவை மாவட்ட பிரதேச செயலக பிரிவுகளை பாதித்துள்ள யானை- மனித மோதலுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவது குறித்தே இதன்போது முதலில் கலந்துரையாடப்பட்டது. மனிதர்கனின் உயிர்களைப் போலவே யானைகளின் உயிர்களும் அழிந்துவிடுகின்றன. அதேபோன்று விவசாயப் பயிர்களும் அதிகளவில் அழிந்துவிடுகின்றன.
எனவே, இந்த நிலைமையைத் தடுக்க நடவடிக்கை எடுப்பதற்கான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. இந்த தீர்வுகள் மூலம் குறித்த பிரச்சனைக்கு குறுகிய கால தீர்வுகள் கிடைக்கும் என்று நம்புவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.