பைக் டாக்சி விவகாரத்தில் அரசு ஆய்வில் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை: “வாடகை பைக் டாக்சி தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது” என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

பைக் டாக்சிகளுக்கு தடை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை, போக்குவரத்து ஆணையரகத்தில் உரிமைக்குரல் உள்ளிட்ட சங்கங்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக விதிமீறும் பைக் டாக்சிகள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கும் போக்குவரத்து ஆணையர் சுன்சோங்கம் ஜடக் சிரு சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.

இது தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கரிடம் இன்று (டிச.11) செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அமைச்சர் கூறியது: “மத்திய அரசு ஏற்கெனவே இருசக்கர வாகனத்தை வாடகை அடிப்படையில் இயக்க அனுமதி வழங்கியிருக்கிறது. இதுகுறித்து ஆய்வு செய்ய தமிழக போக்குவரத்துத் துறை சார்பில் குழு அமைக்கப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆட்டோ ஓட்டுநர்கள் சார்பில் எதிர்ப்பும் இருக்கிறது. விபத்து நேரிட்டால் காப்பீடு பெறுவதில் சிக்கல் எழுகிறது. எனவே, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்,” என்று அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து போக்குவரத்துத் துறையின் நஷ்டம் குறித்த கேள்விக்கு, “டீசல் விலை உயர்ந்தபோதும், அரசு பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்படவில்லை. அண்டை மாநிலங்களில் கிமீ-க்கு ரூ.1.08 என்றளவில் வசூலிக்கின்றனர். இங்கு 52 காசு மட்டுமே வசூலிக்கப்படுகிறது. எனவே, நஷ்டம் வருவது இயற்கை. அதை அரசு ஈடு செய்கிறது. இவ்வாறான போக்குவரத்துத் துறை இயக்கத்தால் தான் தமிழகத்தில் சமச்சீர் வளர்ச்சி இருக்கிறது” என்றார்.

முன்னதாக சென்னை, தலைமைச் செயலகத்தில் வாரிசு நியமன ஆணைகளை வழங்கிய அமைச்சர், மோட்டார் வாகன பராமரிப்புத் துறையை கணினி மயமாக்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார். நிகழ்வில், துறைச் செயலர் க.பணீந்திர ரெட்டி, மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ், தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்புத்துறை இயக்குநர் கோ.செந்தில்வேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.