“என் நாட்டுக்கு அனுப்பி வையுங்கள்…” – ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் இலங்கைத் தமிழர் மண்டியிட்டு போராட்டம்

ராமநாதபுரம்: இந்தியா வந்து பல ஆண்டுகள் ஆகியும் அடையாள அட்டை வழங்காமல், சொந்த நாட்டுக்கும் அனுப்பாமல் அலைக்கழிக்கப்படுவதாக ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் இலங்கை தமிழர் மண்டியிட்டு கண்ணீர் விட்டு கதறியவாறு போராட்டத்தில் ஈடுபட்டார்.

இலங்கை தமிழரான ஜாய் (37), தனக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும், இலங்கைச் செல்ல அனுமதி வழங்க வேண்டும். பல ஆண்டுகளாக தமிழக அரசு அலைக்கழிப்பதாகக் கூறி, இன்று (டிச.11) ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தரையில் மண்டியிட்டு கண்ணீர் மல்க போராட்டத்தில் ஈடுபட்டார்.

இது குறித்து அவர் கூறியது: ”இலங்கை தலைமன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த நான் மீனவர் குடும்பத்தைச் சேர்ந்தவர். இலங்கையில் உள்நாட்டு போர் நடந்தபோது, கடந்த 1997-ம் ஆண்டு படகில் தூங்கிக் கொண்டிருந்தபோது, யாரோ எங்களது படகை எடுத்து வந்து தனுஷ்கோடி பகுதியில் இறக்கிவிட்டனர். அதன்பின் என்னை தனுஷ்கோடி போலீஸார் வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்தனர். நான் மூன்று முறை போலீஸாரால் கைது செய்யப்பட்டு 6 ஆண்டுகள் புழல் சிறையில் இருந்துள்ளேன்.

போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கை தமிழர் ஜாயை விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீஸார்.

தற்போது மண்டபம் முகாமில் எனக்கு இலங்கை தமிழருக்கான பதிவு, அடையாள அட்டை, சலுகைகள் இன்றி தங்க வைத்துள்ளனர். எனது தாய், தந்தையைப் பார்க்க இலங்கைக்கும் செல்ல முடியவில்லை. பல நேரம் கோயில்களில் போடும் அன்னதானம் வாங்கி சாப்பிட்டுவிட்டு எங்காவது உறங்குகிறேன். இலங்கைக்கு அனுப்பி வைக்கும்படி பலமுறை இலங்கை அகதிகள் முகாம் நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை” என தெரிவித்தார்.

அதனையடுத்து, ராமநாதபுரம் கேணிக்கரை போலீஸார் இளைஞர் ஜாயை அழைத்துச் சென்று அறிவுரைகள் கூறி, கியூ பிரிவு போலீஸாரை அணுகுமாறு அனுப்பி வைத்தனர். இலங்கை தமிழர் ஜாய் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அப்போது அவர் மீது நாகர்கோவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் அங்குள்ள நீதிமன்றம் உடனடியாக ஜாயை இலங்கையில் இருக்கும் பெற்றோரிடம் ஒப்படைக்குமாறு தெரிவித்துள்ளனர்.

மேலும், இவர் கடந்த ஆண்டு பிப்ரவரியில் தன்னை இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டும், இல்லை என்றால் உரிய அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணாடியை உடைத்து தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.