Champions Trophy News Tamil | அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கான அட்டவணையை ஐசிசி இன்னும் வெளியிடவில்லை. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் பிரச்னையே இதற்கு மிகப்பெரிய காரணம். பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப மறுத்துவிட்டது. இதற்குப் பிறகு, ஹைப்ரிட் மாடலின் கீழ் இந்த போட்டியை நடத்த ஐசிசி நடவடிக்கை எடுத்தது. அதன்படி, இந்தியா தனது அனைத்து போட்டிகளையும் பாகிஸ்தானில் விளையாடுவதற்குப் பதிலாக வேறு ஏதேனும் நாட்டில் விளையாடும். இதற்கு முதலில் சம்மதிக்காத பாகிஸ்தான், ஐசிசியின் கடுமையான அணுகுமுறைக்குப் பிறகு ஒப்புக்கொண்டது.
அதேநேரத்தில் பாகிஸ்தான் அணி சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது. இருப்பினும், இதனை ஐசிசி ஏற்காது என தெரிகிறது. அப்படியான சூழலில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தொடரில் இருந்து விலகலாம் என நினைத்தால் கூட அந்த அணியால் முடியாது. ஐசிசி சட்டவிதிகள் என்ன சொல்கிறது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
பாகிஸ்தான் வெளியேறினால் என்ன?
அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற உள்ளது சாம்பியன்ஸ் டிராபி போட்டி. இதில் நீடிக்கும் பிரச்சனை காரணமாக, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தொடரில் இருந்து விலகலாமா? என யோசிக்கிறது. இருப்பினும் அந்த அணியால் அந்தமுடிவை எடுக்க முடியாது. ஏனென்றால் மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்படுவதுடன் ஐசிசி வழக்குகளையும் அந்த அணி எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதுகுறித்து மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘ஐசிசியுடன் ஹோஸ்டிங் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மட்டுமல்லாமல், இந்த போட்டியில் பங்கேற்கும் மற்ற எல்லா நாடுகளையும் போலவே, ஐசிசியுடன் உறுப்பினர்களின் கட்டாய பங்கேற்பு ஒப்பந்தத்திலும் (எம்பிஏ) பாகிஸ்தான் கையெழுத்திட்டுள்ளது. ஐசிசி போட்டிகளில் பங்கேற்க எம்பிஏவில் கையெழுத்திட்ட பிறகுதான், ஐசிசி போட்டிகளின் வருவாயில் ஒரு பங்கைப் பெற எந்தவொரு உறுப்பு நாடுக்கும் உரிமை உள்ளது. அதன்படி பாகிஸ்தான் அணிக்கு வருவாய் கிடைக்காது.” என தெரிவித்துள்ளார்.
ஐசிசி முடிவு என்ன?
கடந்த வாரம், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை ஹைபிரிட் மாடலில் நடத்த ஐசிசி அதிகாரப்பூர்வமாக முடிவெடுத்துவிட்டது. இதன்படி இந்தியா தனது போட்டிகளை துபாயில் விளையாடவுள்ளது. அதேபோல் 2027 ஆம் ஆண்டு வரை இந்தியா நடத்தும் ஐசிசி போட்டிகளிலும் பாகிஸ்தான் அணியும் ஹைபிரிட் மாடலிலேயே பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
பாகிஸ்தான் மீதும் வழக்கு தொடரலாம்
சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து பாகிஸ்தான் வெளியேறினால், ஐசிசி மற்றும் ஐசிசி நிர்வாகக் குழுவில் உள்ள மற்ற 16 உறுப்பு நாடுகளும் அந்த அணிக்கு எதிராக வழக்குத் தொடரலாம். ஸ்டீரிமிங் லைசென்ஸ் பெற்றவர்களும் அந்த அணி மீது வழக்கு தொடர வாய்ப்பு உள்ளது. ஏனெனில் பாகிஸ்தான் திடீரென சாம்பியன்ஸ் டிராபி தொரில் இருந்து வெளியேறுவது அனைத்து ஐசிசி உறுப்பு நாடுகளுக்கும் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் என்பதால் இந்த சட்ட நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடிக்கு பாகிஸ்தான் அணி தள்ளப்படும்.