புதுடெல்லி: சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்துப் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தனக்கு எதிரான அவதூறான கருத்துக்களை நீக்குமாறும், அவை சுமூகமாக நடப்பதை உறுதிப்படுத்துமாறும் கோரிக்கை விடுத்தார்.
ஓம் பிர்லா உடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “நான் சபாநாயகரைச் சந்தித்தேன். என் மீதான அவதூறான கருத்துக்களை அகற்ற வேண்டும் என்று எங்கள் கட்சி கூறுகிறது என்று நான் அவரிடம் சொன்னேன். சபாநாயகர் அவற்றை ஆய்வு செய்வதாக கூறினார். அவர்கள் (பாஜக) அனைத்து வகையான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் தொடர்ந்து கூறுகிறார்கள். ஆனால் நாங்கள் சபை செயல்பட வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்தோம்.
அவர்கள் எப்படி ஆத்திரமூட்டினாலும் நாங்கள் அவர்களை அனுமதிப்போம். அதேநேரத்தில், சபையை நடத்த நாங்கள் முயற்சிப்போம். சபை செயல்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். விவாதமும் கருத்துப் பரிமாற்றமும் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். டிசம்பர் 13 அன்று அரசியலமைப்பு மீதான விவாதம் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதானி பிரச்சினை குறித்த விவாதத்தை அவர்கள் விரும்பவில்லை. அதானி பிரச்சினையிலிருந்து திசைதிருப்ப விரும்புகிறார்கள். எனினும், நாங்கள் அவர்களை விட மாட்டோம்.” என்று கூறினார்.
காங்கிரஸ் தலைமைக்கும் அமெரிக்க கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரஸுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக பாஜக முன்வைக்கும் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதில் அளித்த ராகுல் காந்தி, “அவர்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைப்பார்கள். அவர்கள் என்ன குற்றச்சாட்டுகளை வைத்தாலும், நாடாளுமன்றம் செயல்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எனக்கு எதிராக அவர்கள் என்ன குற்றச்சாட்டை முன்வைத்தாலும் அதை விட்டுவிடுங்கள். சபையை நடத்துவது எங்கள் பொறுப்பு அல்ல என்றாலும், சபை 100 சதவீதம் செயல்பட நாங்கள் ஒத்துழைப்போம்.” என்று காந்தி கூறினார்.
முன்னதாக, மக்களவையில் காங்கிரஸ் துணைத் தலைவர் கவுரவ் கோகோய், ராகுல் காந்திக்கு எதிராக பாஜக எம்பி நிஷிகாந்த் துபே பேசிய அவதூறு கருத்துகளை பதிவிலிருந்து நீக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு கடிதம் எழுதினார். சபாநாயகரின் முடிவுக்குப் பிறகு, நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் பட்டியலிடப்பட்டுள்ள சட்டமன்ற அலுவல்களில் பங்கேற்க காங்கிரஸ் கட்சி ஆர்வமாக உள்ளதாகவும் கோகோய் தெரிவித்திருந்தார்.