பெர்த்,
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் இரு போட்டிகளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 3வது போட்டி பெர்த்தில் இன்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற இந்தியா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 298 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியா தரப்பில் சதர்லேண்ட் 110 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் அருந்ததி ரெட்டி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 299 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிர் அணி களம் இறங்கியது.
இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்மிருதி மந்தனா மற்றும் ரிச்சா கோஷ் ஆகியோர் களம் இறங்கினர். இதில் ரிச்சா கோஷ் 2 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து ஹார்லீன் தியோல் களம் இறங்கினார். மந்தனா – ஹார்லீன் தியோல் இணை நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தது.
இதில் ஹார்லீன் தியோல் 39 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து களம் இறங்கிய வீராங்கனைகள் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதில் ஹர்மன்ப்ரீத் கவுட் 12 ரன், ரோட்ரிக்ஸ் 16 ரன், மின்னு மணி 8 ரன், அருந்ததி ரெட்டி 5 ரன், டைட்டஸ் சாது 3 ரன், தீப்தி சர்மா மற்றும் சைமா தாக்கோர் ரன் எடுக்காமலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர்.
மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய ஸ்மிருதி மந்தனா சதம் (105 ரன்) அடித்து அவுட் ஆனார். இறுதியில் இந்திய அணி 45.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 215 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 83 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதுடன் இந்தியாவை ஒயிட் வாஷ் செய்தது.