‘இந்துத்துவா ஒரு நோய்’ என்று குறிப்பிட்ட ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் மகள் இல்திஜா முப்திக்கு பல்வேறு கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இல்திஜா முப்தி கடந்த சனிக்கிழமை, ‘ஜெய் ஸ்ரீராம்’ என கூறுமாறு 3 முஸ்லிம் சிறுவர்கள் தாக்கப்படும் ஒரு வீடியோவுக்கு எதிர்வினையாற்றியிருந்தார்.
அப்பதிவில் அவர், “இந்துத்துவா என்பது கோடிக்கணக்கான இந்தியர்களை பாதித்து, கடவுளின் பெயரைக் கெடுக்கும் ஒரு நோய்” என்று குறிப்பிட்டிருந்தார். அவரது கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் அஜய் அலோக் கூறுகையில், “ஜம்மு காஷ்மீருக்கும் நாட்டுக்கும் மிகப்பெரிய நோயாக முப்தி குடும்பம் உள்ளது. இந்துத்துவாவுக்கு எதிரான இதுபோன்ற அறிக்கைகளை தவிர்ப்பது அவர்களுக்கு நல்லது” என்றார்.
உ.பி. காங்கிரஸ் எம்.பி. இம்ரான் மசூத் கூறுகையில், “இதுபோன்ற ஆதாரமற்ற கருத்துகளை கூறுவதன் மூலம் சிலர் அரசியல் ஆதாயம் தேடிக் கொள்ள விரும்புகின்றனர். ஒருவர் அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும். பிறரின் மதத்தை நீங்கள் மதிக்காதபோது, அவர்கள் எப்படி உங்கள் மதத்தை மதிர்ப்பார்கள்?” என்றார்.
மகாராஷ்டிர ஏஐஎம்ஐஎம் எம்எல்ஏ மும்மது இஸ்மாயில் அப்துல் காலிக் கூறுகையில், “மதவெறிப் பேச்சு ஒரு புண், நோய் போன்றது. நமது நாடு மதச்சார்பற்றது, இங்கு ஒவ்வொருவருக்கும் அவரவர் உரிமைகள் உள்ளன. மதவெறி அல்லது பாகுபாடு பற்றி பேசுவது சரியல்ல” என்றார்.
சமாஜ்வாதி எம்எல்ஏ ரோகித் பவார் கூறுகையில், “எந்த ஒரு மதத்தைப் பற்றியும் இதுபோன்ற இழிவான கருத்துகளை யாரும் கூறக்கூடாது” என்றார்.
பல்வேறு தரப்பிலும் கடும் விமர்சனம் எழுந்ததை தொடர்ந்து, “ராம ராஜ்ஜியத்தை நிலைநாட்டப் போவதாக கூறுவோர் மிருகத்தனமான செயல்களில் ஈடுபடும்போது அவர்களின் பாசாங்குத்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டவே இப்பதிவை வெளியிட்டேன்” என இல்திஜா விளக்கம் அளித்திருந்தார்.