புதுடெல்லி: சிரியாவில் இருந்து தாயகம் திரும்பும் இந்தியர்களில் ஒருவர், அங்குள்ள அசாதாரண சூழ்நிலையை விவரித்தார். சிரியாவில் வரும் நாட்களில் நிலைமை இன்னும் மோசமாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிரியாவில் 13 ஆண்டு கால உள்நாட்டுப் போருக்கு பிறகு கிளர்ச்சிப் படைகள் ஆட்சியை கைப்பற்றியுள்ளன. அங்கு பதற்றமாக சூழல் நிலவுகிறது. இதையடுத்து சிரியாவில் தவித்த 75 இந்தியர்களை அங்குள்ள இந்தியத் தூதரகம் பத்திரமாக மீட்டது. அவர்கள் லெபனான் தலைநகர் பெய்ரூட்டுக்கு பேருந்தில் அழைத்து வந்தது.
இந்த 75 இந்தியர்களில் ஒருவரான ரவி பூஷண், தாயகம் புறப்படும் முன் அங்கிருந்து கூறியது: “சிரியாவில் இந்தியா மீட்புப் பணியை தொடங்கியுள்ளது. சிரியாவில் இருந்து மீட்கப்பட்ட முதல் குழு நாங்கள்தான். அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகள் எங்கள் ஒவ்வொருடனும் தனித்தனியாக தொடர்புகொண்டனர். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை எங்களிடம் மீட்பு நடவடிக்கையின் முன்னேற்றம் குறித்து விளக்கினர். உணவு உள்ளிட்ட எங்கள் பிரச்சினைகளை தீர்த்து வைத்தனர். சிரியா மற்றும் லெபனானில் உள்ள இந்திய தூதரகரங்கள் மற்றும் இந்திய அரசுக்கு நன்றி தெரிக்கிறோம்.
சிரியாவில் மற்ற நாட்டு மக்கள் தவிப்பதை பார்த்தோம். 4-5 டிகிரி வெப்பநிலை கொண்ட கடும் குளிரில் பெண்களும் குழந்தைகளும் 10-12 மணி நேரத்துக்கும் மேலாக வெளியில் உட்கார வைக்கப்பட்டுள்ளனர். அது உண்மையில் பயங்கரமானது. ஆனால் இந்திய அரசின் முற்சியால் இதுபோன்ற எந்தப் பிரச்சியையும் நாங்கள் சந்திக்கவில்லை.
சிரியாவில் தற்போது நிலைமை மிக மோசமாக உள்ளது. மக்கள் நடமாட்டமுள்ள சாலையில் துப்பாக்கியால் சுடுகின்றனர், குண்டுகளை வீசுகின்றனர். வங்கிகளை சூறையாடுகின்றனர். இதனால் மக்களிடம் பீதி நிலவுகிறது. விமான நிலையத்தை முற்றிலும் சேதப்படுத்தி விட்டனர். ஓட்டல்கள் மற்றும் பிற இடங்களில் நிறுத்தப்படும் வாகனங்கள் அனைத்தையும் சேதப்படுத்தி வருகின்றனர். இதனால் வரும் நாட்களில் அங்கு நிலைமை இன்னும் மோசமாகும் என கருதுகிறோம்” என்றார் ரவி பூஷண்.
டெல்லி அருகே காஜியாபாத்தை சேர்ந்த இவர் தொழில் காரணங்களுக்காக சிரியா சென்றிருந்தார். “நான் சென்றபோது அங்கு சூழ்நிலை நன்றாக இருந்து. ஆனால் 2-3 நாட்களில் நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. இதனை நான் எதிர்பார்க்கவில்லை” என்று அவர் கூறினார்.