நாட்டின் அணு மின்சக்தி உற்பத்தி கடந்த 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகரித்துள்ளது என்றும், 2031-ம் ஆண்டுக்குள் மும்மடங்கு அதிகரிக்கும் என அணுசக்தி துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
அணு மின்சக்தி உற்பத்தி தொடர்பாக மக்களவையில் அணுசக்தி துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது: நாட்டின் அணு மின்சக்தி உற்பத்தி கடந்த 2014-ம் ஆண்டு 4,780 மெகா வாட்டாக இருந்தது. இது 2024-ம் ஆண்டில் 8,081 மெகா வாட்டாக அதிகரித்துள்ளது. 2031-32-ம் ஆண்டுக்குள் நாட்டின் அணு மின்சக்தி உற்பத்தி 3 மடங்காக அதிகரித்து 22,480 மெகா வாட்டாக உயரும். நாட்டின் அணுசக்தி கட்டமைப்புகளை அதிகரிக்க மத்திய அரசு உறுதியுடன் உள்ளது.
தற்போது நாட்டில் 9 அணு மின்சக்தி திட்டங்களின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்னும் பல அணு மின்சக்தி திட்டங்கள் பரிசீலனையில் உள்ளன. அணு மின்சக்தி திறனை விரிவுபடுத்துவதில் மத்திய அரசு அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. நாட்டின் மின்பகிர்வு திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. எந்த மாநிலத்தில் அணு மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறதோ, அந்த மாநிலத்துக்கு மொத்த உற்பத்தியில் 50 சதவீத மின்சாரம் வழங்கப்படும். அண்டை மாநிலங்களுக்கு 35 சதவீத மின்சாரம் வழங்கப்படும். மத்திய தொகுப்புக்கு 15 சதவீதம் எடுத்துக் கொள்ளப்படும். இந்த புதிய விதிமுறை, வளங்களை சமமாக பகிர்ந்தளிப்பதையும், நாட்டின் கூட்டாட்சி உணர்வையும் பிரதிபலிக்கிறது.
அணு மின்சக்தி உற்பத்தியை மேம்படுத்துவதில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 10 அணு மின்சக்தி திட்டங்களுக்கு மொத்தமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுத் துறை நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவது, தனியார் நிறுவன பங்களிப்பை கட்டுப்படுத்துவது போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. நாட்டின் அணுசக்தி கட்டமைப்பை வலுப்படுத்த தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன, நிர்வாக நடைமுறைகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.
வேளாண், சுகாதாரம், பாதுகாப்பு என பல துறைகளில் அணு மின்சக்தி பயன்படுத்தப்படுகிறது. வேளாண் துறையில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் 70 மியூடாஜெனிக் பயிர் வகைகள் உருவாக்கப்பட்டுள்ளன. சுகாதார துறையில் புற்றுநோய் சிகிச்சைக்கு அதிநவீன ஐசோடோப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு துறையில் எடை குறைவான குண்டு துளைக்காத உடைகள் தயாரிப்பிலும் அணுசக்தி நடைமுறை பயன்படுத்தப்படுகிறது.
நம் நாட்டில் தோரியம் வளம் அதிகமாக உள்ளது. இது உலகளவில் உள்ள மொத்த தோரியத்தில் 21 சதவீதம் ஆகும். இது போன்ற வளங்களை ஒழுங்குபடுத்த பவானி என்ற உள்நாட்டு திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. இதுன் மூலம் யுரேனியம் உட்பட இதர பொருட்களுக்கு இறக்குமதியை சார்ந்திருப்பது குறையும். இவ்வாறு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார்.