‘வருங்கால வைப்பு நிதி உறுப்பினர் இறந்தால் அவரது நாமினிக்கு ரூ.2.5 லட்சம் – ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்’ என்பது உங்களுக்கு தெரியுமா…இப்படியான EDLI திட்டம் குறித்து விரிவாக விளக்குகிறார் Wealth Ladder நிறுவனர் ஶ்ரீதரன்…
“Employees Deposit Linked Insurance என்பதன் சுருக்கமே EDLI. இந்தத் திட்டம் 1976-ம் ஆண்டு வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்களுக்கு காப்பீட்டு நன்மைகளை பெற தொடங்கப்பட்டது ஆகும். ஒருவேளை, உறுப்பினர் இறந்துவிட்டால், அவரது குடும்பத்திற்கு நிதி உதவி கிடைப்பதை உறுதி செய்வதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். பணியாளர் இறப்பதற்கு முன் பணிபுரிந்த கடைசி 12 மாதங்களில் பெறப்பட்ட சம்பளத்தைப் பொறுத்து காப்பீட்டுத் தொகை வழங்கப்படும். உறுப்பினர் விபத்து மற்றும் வேறு எந்தக் காரணங்களால் இறந்திருந்தாலும் இந்த இழப்பீடு கிடைக்கும்.
யார் யார் இழப்பீடு பெறலாம்?
இந்த காப்பீட்டின் நன்மைகளை குடும்ப உறுப்பினர்கள், சட்டப்பூர்வ வாரிசுகள் அல்லது உறுப்பினர்களின் நாமினிகள் பெறலாம். வருங்கால வைப்பு நிதியில் உறுப்பினராக இருப்பவர்கள் அனைவரும் தானாகவே EDLI திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுவார்கள். வருங்கால வைப்பு நிதியில் உறுப்பினராக இருக்கும் வரை மட்டுமே அவர்கள் EDLI திட்டத்தின் கீழ் வருவர்.
வருங்கால வைப்பு நிதி பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தில் இருந்து ஊழியர் வெளியேறியப் பிறகு, அவரது நாமினியால் இந்த திட்டத்தின் நன்மைகளைக் கோர முடியாது. இந்த EDLI-க்கான பங்களிப்பை நிறுவனம் மட்டும் செலுத்த வேண்டுமே தவிர, பணியாளர்களின் சம்பளத்தில் இருந்து பிடிக்கக் கூடாது.
தொகை எப்படி கணக்கிடப்படும்?
இறந்தவர் கடைசியாக பணிபுரிந்த 12 மாதங்களின் சராசரி சம்பளத்தின் 35 மடங்கு தொகை ஊழியரின் நாமினி அல்லது வாரிசு பெறும் EDLI தொகை.
உதாரணமாக, ஒரு ஊழியரின் 12 மாத சராசரி சம்பளம் ரூ.15,000 என்று எடுத்துக்கொள்வோம். 15,000*35 = ரூ.5,25,000. ஆக, வாரிசு அல்லது நாமினி பெறப்போகும் தொகை ரூ.5,25,000. மேலும், இந்த திட்டத்தின் கீழ் க்ளைம் செய்பவருக்கு ரூ. 1,75,000 போனஸ் தொகையாக வழங்கப்படும்.
இவ்வாறு இந்தத் திட்டத்தில் ரூ.2.5 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை இழப்பீடு கிடைக்கும்.
விண்ணப்பிக்க என்ன செய்ய வேண்டும்?
ஒருவேளை வைப்பு நிதி உறுப்பினர் இறந்துவிட்டால்,
5 IF படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்;
இழப்பீடு உரிமைக்கோரல் படிவத்தில் நிறுவனம் கையொப்பமிட்டு இருக்க வேண்டும்;
அப்படியில்லை என்றால், அந்தப் படிவத்தில் மாஜிஸ்திரேட், கிராம பஞ்சாயத்து தலைவர், நகராட்சி அல்லது மாவட்ட உள்ளூர், வாரியத்தின் தலைவர் / செயலாளர் / உறுப்பினர், போஸ்ட் மாஸ்டர் அல்லது சப் போஸ்ட் மாஸ்டர், எம்.பி அல்லது எம்.எல்.ஏ, CBT அல்லது EPF-ன் பிராந்தியக் குழு உறுப்பினர் அல்லது வங்கி மேலாளர் (கணக்கு பராமரிக்கப்பட்ட வங்கி) கையொப்பமிட்டு இருக்கலாம்.
யார் யார் விண்ணப்பிக்க முடியாது?
உறுப்பினரின் நடுத்தர வயதை எட்டிய மகன், திருமணமாகிய பெண்கள் மற்றும் பேத்திகள்.
தேவையான ஆவணங்கள் என்னென்ன?
உறுப்பினர் இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ், பயனாளர் மைனராக இருந்தால் பாதுகாவலர் சான்றிதழ், நாமினி அல்லது வாரிசின் ரத்து செய்யப்பட்ட காசோலையின் நகல்.
இந்தத் தொகையை ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் உரிமை கோரினால், தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் படிவங்களை ஆஃப்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
12 சதவிகித வட்டி…
விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் இழப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை என்றால், அதற்கு பிறகு, அந்தத் தொகை 12 சதவிகித வட்டியுடன் கொடுக்கப்படும்” என்று கூறினார்.