உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்வதற்கு ஏற்றவாறு மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையை பயன்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் பழைய மாவட்ட செயலகத்தில் நேற்று (12) இடம் பெற்றது.
இதன்போது, கிழக்கு மாகாணத்தின் புராதன சுற்றுலாத் தளங்களில் ஒன்றான மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையினைப் பயன்படுத்தி உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்கு தேவையான செயற்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
மாவட்டத்திற்குத் தேவையான நூதனசாலை ஒன்றை அமைத்தல், ஒல்லாந்தர் கோட்டைக்கான இணையத்தளம் உருவாக்கம், விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவக மாணவர்களினால் சுற்றுலாப் பயணிகளின் உருவங்களை வரைதல் மற்றும் விஞ்ஞான ஆய்வு கூடம், பாரம்பரிய உணவகம் அமைத்தல் போன்ற பல விடயங்கள் கருத்து க்கள் முன் வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த், உதவி மாவட்ட செயலாளர் ஜி.பிரணவன், மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன், மாநகர சபை மாவட்ட சுற்றுலாத் துறை அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.ஏ.விவேகானந்தராஜ், துறைசார் நிபுணர்கள், அரச சார்பற்ற பிரதி நிதிகள், சுற்றுலாத் துறை அபிவிருத்தி உத்தியோகத்தர் மதனா தயாகரன் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது அதிகாரிகள் மட்டக்களப்பு நகரின் மத்தியில் அமைந்துள்ள 400 வருடங்கள் பழமையான புராதன ஒல்லாந்தர் கோட்டையை பார்வையிட்டமையும் குறிப்பிடத்தக்கது.