ஒற்றுமைக்கான மாபெரும் யாகமான கும்பமேளாவில் சாதி வேறுபாடுகள் மறைந்துவிடும்: பிரதமர் மோடி

பிரயாக்ராஜ்: ஒற்றுமைக்கான மாபெரும் யாகம்தான் கும்பமேளா. இங்கு சாதி வேறுபாடுகள் மறைந்துவிடும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை மகா கும்பமேளா திருவிழா நடைபெற உள்ளதை முன்னிட்டு, அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை பிரதமர் மோடி இன்று ஆய்வு செய்தார். பிரயாக்ராஜில் ரூ.5,500 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “ஒற்றுமைக்கான மிகப் பெரிய யாகம்தான் இந்த கும்பமேளா. இங்கு அனைத்து விதமான வேறுபாடுகளும் தியாகம் செய்யப்படுகின்றன. கும்பமேளாவில் நீராட வருகை தர உள்ள ஒவ்வொரு இந்தியரும் ஒரே இந்தியா; உன்னத இந்தியா என்ற படத்தை வெளிப்பாடுகளாக இருப்பார்கள்.

மூன்று நதிகள் சங்கமிக்கும் இந்த புண்ணிய இடத்தில் துறவிகள், ஞானிகள், மகான்கள், படித்தவர்கள், சாமானிய மக்கள் என அனைவரும் ஒன்றாக புனித நீராடுவார்கள். சாதி வேறுபாடுகள் இங்கு மறையும். சமூக மோதல்கள் நீங்கும். மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற இரவு பகலாக உழைத்து வரும் பணியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தினமும் லட்சக்கணக்கான பக்தர்களை வரவேற்று சேவை செய்வதற்கான ஏற்பாடுகள், தொடர்ந்து 45 நாட்களுக்கு நடைபெற உள்ள மகாயாகம், புதிய நகரம் அமைக்கும் மாபெரும் பிரச்சாரம் ஆகியவை பிரயாக்ராஜ் என்ற இந்த மண்ணில் புதிய வரலாறு படைக்க இருக்கிறது. இது உலகம் முழுவதும் விவாதிக்கப்படும்.

நமது இந்தியா புனித ஸ்தலங்கள் மற்றும் யாத்திரைகள் நிறைந்த நாடு. கங்கை, யமுனை, சரஸ்வதி, காவேரி, நர்மதை போன்ற எண்ணற்ற புனித நதிகளைக் கொண்ட நாடு. பிரயாக்ராஜ் மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் இடம் மட்டுமல்ல. சூரியன் மகர ராசியில் நுழையும் போது, ​​அனைத்து தெய்வீக சக்திகள், அனைத்து யாத்ரீகர்கள், அனைத்து முனிவர்கள், மகா முனிவர்களும் பிரயாகைக்கு வருகிறார்கள் என்கின்றன நமது பழங்கால நூல்கள். பிரயாக்ராஜ் என்பது வேத வாக்கியங்களில் புகழப்பட்ட இடம்.

மஹா கும்பம் என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடந்து வரும் நமது நாட்டின் கலாச்சார மற்றும் ஆன்மீக பயணத்தின் வாழும் அடையாளமாக உள்ளது. கிராமங்கள், நகரங்கள் மற்றும் மாநகரங்களில் இருந்து மக்கள் பிரயாக்ராஜ் நோக்கி செல்கிறார்கள். சமூகத்தின் இத்தகைய சக்தி, இது போன்ற கூட்டம் வேறு எங்கும் காணப்படுவது அரிது.

கும்பமேளா போன்ற பிரமாண்டமான மற்றும் தெய்வீக நிகழ்வை வெற்றிபெறச் செய்வதில் தூய்மை, பெரும் பங்கு வகிக்கிறது. மகாகும்பத்திற்கான ஏற்பாடுகளுக்காக, நமாமி கங்கே திட்டம் விரைவாக முன்னெடுக்கப்பட்டு, பிரயாக்ராஜ் நகரின் சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இம்முறை, 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளிகள், சகோதரிகள் தூய்மையை கவனிக்க உள்ளனர். கும்பமேளாவுக்கு தயாராகி வரும் எனது துப்புரவுத் தொழிலாள சகோதர சகோதரிகளுக்கு எனது நன்றியை முன்கூட்டியே தெரிவித்துக் கொள்கிறேன்.

மகாகும்பமேளா சமூகத்துக்கு வலிமையை வழங்குவதோடு, மக்களின் பொருளாதாரத்துக்கும் வலிமையை வழங்குகிறது. கடந்த கால ஆட்சியாளர்கள் மகாகும்பமேளாவுக்கு உரிய கவனத்தை கொடுக்கவில்லை. ஏனெனில், அவர்கள் இந்திய கலாச்சாரத்தோடு ஒட்டுதல் இல்லாதவர்கள். ஆனால், இன்று மத்தியிலும், மாநிலத்திலும் இருக்கும் அரசாங்கங்கள் இந்திய கலாச்சாரத்துக்கு முக்கியத்துவம் தரக்கூடியவை. எனவேதான், இந்த இரட்டை என்ஜின் அரசு, கும்பமேளாவுக்கு வருகை தர உள்ள பக்தர்களுக்கான வசதிககளை நிறைவேற்றும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளது” என தெரிவித்தார்.

முன்னதாக, திரிவேணி சங்கமத்தில் பூஜை மற்றும் தரிசனம் செய்த பிரதமர் மோடி, பிறகு ஹனுமான் மற்றும் சரஸ்வதி கோவில்களில் தரிசனம் செய்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.