அசோக ரன்வல்ல சபாநாயகர் பதவியிலிருந்து இராஜினாமா

பாராளுமன்ற சபாநாயகர் அசோக ரன்வல்ல தனது பதவி தொடர்பாக இன்று (13) கையெழுத்திட்டு ஊடக அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.

அதற்கிணங்க சபாநாயகர் அசோக ரன்வல தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு தான் வகிக்கும் சபாநாயகர் பதவியை இராஜினாமாச் செய்வதாக அவ்வறிவித்தலில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவ்வறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது..

கடந்த சில தினங்களாக தன்னுடைய கல்வித் தகைமை தொடர்பான கருத்து முரண்பாடு சமூகத்தில் ஏற்பட்டுள்ளது. தன்னுடைய கல்வித் தகைமை தொடர்பாக எவ்வித பொய்யான அறிவித்தலும் தன்னால் பிரசுரிக்கப்படவில்லை.

ஆனால் அந்தக் கல்வித் தகைமைகளை உறுதிப்படுத்துவதற்காக அவசியமான சில ஆவணங்கள் தற்போது தன்னிடம் இல்லாமையினால், அதனுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து பெற்று கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளதாகவும், அவ்வாவணங்களை தற்போது விரைவாக சமர்ப்பிப்பதற்கு சிரமமாக உள்ளது.  

அத்துடன், தனக்கு கலாநிதி பட்டத்தை வழங்கிய ஜப்பானின் வசீதா பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து குறித்த பட்டத்துடன் தொடர்புடைய கல்வி ஆவணங்களை சமர்ப்பிக்க முடியுமாக இருப்பதுடன், அவற்றை முடிந்தவரை விரைவாக சமர்ப்பிப்பதற்கு தான் உத்தேசித்துள்ளதாகவும் அசோக ரன்வல தமது ஊடக அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் ஏற்பட்டுள்ள நிலமையைக் கருத்தில் கொண்டு அரசாங்கமும் தன் மீது நம்பிக்கை வைத்துள்ள மக்களையும் அசௌகரியத்திற்கு உள்ளாக்காதிருப்பதற்காக தற்போது தான் வகிக்கும் சபாநாயகர் பதவியில் இருந்து இராஜினாமாச் செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் விடுத்துள்ள அறிவித்தலில் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.