ஐதராபாத்,
நடிகர் அல்லு அர்ஜுன் கடந்த 4ம் தேதி இரவு ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டருக்கு திரையிடப்பட்ட புஷ்பா 2 படத்தை பார்க்க சென்றார். அவரை காண தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது, குடும்பத்துடன் புஷ்பா 2 படம் பார்க்க வந்த ரேவதி (வயது 35) என்ற பெண் கூட்ட நெரிசலில் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தைய நிலையில் ரேவதி உயிரிழந்த சம்பவத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், இந்த சம்பவத்தில் நடிகர் அல்லு அர்ஜுனை போலீசார் இன்று கைது செய்தனர். சிக்கட்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செய்யப்பட்ட அல்லு அர்ஜுன் பின்னர் நம்பள்ளி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, விசாரணை மேற்கொண்ட கோர்ட்டு, அல்லு அர்ஜுனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டது.
இதனிடையே, தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி அல்லு அர்ஜுனா தெலுங்கானா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி தெலுங்கானா ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஐகோர்ட்டு இடைக்கால ஜாமீன் வழங்கியதையடுத்து கைது செய்யப்பட்டுள்ள அல்லு அர்ஜுன் இன்றே விடுதலை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அல்லு அர்ஜுன் கைதுசெய்யப்பட்டதற்கு அவரது ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், அரசியல் தலைவர்களும் இந்த கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் அல்லு அர்ஜுனின் கைதுக்கு ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக் அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;
“தியேட்டரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இறந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு ஏற்பட்ட இழப்பு ஈடுசெய்ய முடியாதது. திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண் உயிரிழந்த சம்பவத்திற்கு அவர் ஆறுதல் தெரிவித்துவிட்டார். மேலும் இவ்விவகாரத்தில் பொறுப்புடன் செயல்பட்டார். இருப்பினும் இச்சம்பவத்திற்கு அவரை நேரடியாக பொறுப்பாளியாக்குவது எந்த விதத்தில் நியாயம்? கூட்ட நெரிசலில் நேரடியாக ஈடுபடாவிட்டாலும், அர்ஜுன் மீது கிரிமினல் வழக்குகளைப் பதிவு செய்து அவரைக் கைது செய்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.”
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.