தன் சாதியின் மீது அதீத வெறி கொண்டவரான தலைவாசல் விஜய், தன்னுடைய மகள் பவித்ரா வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரைப் பதிவுத் திருமணம் செய்யப்போவதை அறிந்து, பெரும் கோபத்துடன் அதைத் தடுக்க கிளம்புகிறார். புதிதாகத் திருமணமாகி தன் கணவனின் வீட்டிற்கு வரும் அஞ்சலி நாயரின் வாழ்க்கையையே புரட்டிப்போடும் சம்பவங்கள், அவ்வீட்டில் நிகழ்கின்றன. முன்னாள் ரவுடியான பரத், ஆஸ்பத்திரியில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் தனது காதல் மனைவியைக் காப்பாற்றப் பணமில்லாமல் அல்லல்படுகிறார். தன் மகளின் மருத்துவப் படிப்பிற்காக, கந்துவட்டிக்காரரிடம் கடன் வாங்குகிறார் அபிராமி. வட்டியைச் சரியாகக் கட்டாததால், அவரது மகளுக்குக் கந்துவட்டிக்காரர் தொல்லை கொடுக்க, கையறு நிலையில் கலங்கி நிற்கிறார் அபிராமி. இப்படி இக்கட்டில் சிக்கி நிற்கும் இந்த நான்கு மனிதர்களின் கைகளில் எதிர்பாராத விதமாக ஒரு துப்பாக்கி கிடைக்கிறது. அந்தத் துப்பாக்கி அவர்களின் வாழ்க்கையில் அடுத்தடுத்து நிகழ்த்தும் சம்பவங்களே இயக்குநர் பிரசாத் முருகனின் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’.
தன் முதிர்ச்சியான நடிப்பால் அக்கதாபாத்திரத்திற்கு உருவம் கொடுத்திருக்கும் தலைவாசல் விஜய், இரண்டாம் பாதியில் தனியாளாக அக்கதையை நகர்த்தும் முயற்சிகளில் ஓவர்டோஸ் நடிப்பை வழங்கியிருக்கிறார். காதல், கோபம், ஆற்றாமை, ஆக்ரோஷம் எனப் பயணிக்கும் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார் பரத். உணர்ச்சித் ததும்பலில் தத்தளிக்கும் கடினமான கதாபாத்திரத்தில் பாதி கிணற்றைத் தாண்டியிருக்கிறார் அபிராமி. கொடுத்த வேலையைக் குறைவின்றி செய்திருக்கிறார் அஞ்சலி நாயர். எக்கச்சக்க துணைக் கதாபாத்திரங்களுக்கு மத்தியில் கனிகா, ராஜாஜி, கல்கி ராஜன் ஆகியோர் மட்டும் கவனிக்க வைக்கின்றனர்.
கே.எஸ். காளிதாஸ் மற்றும் கண்ணா. ஆர் ஒளிப்பதிவில் சில ப்ரேம்களில் நம்பிக்கை தந்தாலும், மற்ற இடங்களில் நேர்த்தியில்லாத திரைமொழிக்கே வழிவகுக்கிறது. கச்சிதமும், கோர்வையும் இல்லாமல் நான்கு கதைகளையும் தத்தளிக்க விட்டிருக்கிறது ஷான் லோகேஷின் படத்தொகுப்பு. முக்கியமாக, பல காட்சிகள் ஜம்ப் ஆகி ஓடுவது ஏமாற்றமே! ஜோஸ் ஃப்ராங்கிளினின் இசையில் பாடல்கள் கைகொடுக்கவில்லை.
நான்கு வெவ்வேறு சூழலில், வெவ்வேறு நிலைகளிலுள்ள மனிதர்களின் கைகளில் ஒரு துப்பாக்கி கிடைத்தால் என்ன ஆகும் என்ற சுவாரஸ்ய ஒன்லைனைக் கையிலெடுத்திருக்கும் இயக்குநர் பிரசாத் முருகன், அதை அழுத்தமில்லாத திரைக்கதையாலும், மேம்போக்கான மேக்கிங்காலும் பலவீனமாக்கியிருக்கிறார்.
சுற்றி வளைக்காமல் நான்கு கதைகளுக்குள்ளும் நேராகத் திரைக்கதை செல்வது தொடக்கத்தில் திரையின் மீதான பிடிப்பைக் கூட்டுகிறது. ஆனால், அந்த அழுத்தமான கதைகளுக்கு நியாயம் செய்யும் வகையில் காட்சிகள் இல்லாததும், ஒளிப்பதிவு, எடிட்டிங் எனத் தொழில்நுட்ப ரீதியாக சீரியல்தன்மையைத் தரும் திரைமொழியும் இறுதிக்காட்சி வரை சறுக்கல்களையே தந்திருக்கின்றன. அதிகாரத்திற்கு எதிராகப் போராடும் பெண், பெண்களுக்கும் திருநர்களுக்கும் நிகழ்த்தப்படும் கொடுமைகள், ஆணவக் கொலை, தன்பாலின ஈர்ப்பு, குடும்பம் என்ற பெயரில் கட்டப்படும் போலி கௌரவம், அதனால் பாதிக்கப்படும் பெண்கள் எனப் பல சமூக அவலங்களையும், சமூக கருத்துகளையும் பேச முயன்றிருக்கிறது படம். ஆனால், அவை காட்சிகளாக திரையேறாமல், பக்கம் பக்கமான வசனங்களாகவும், தத்துவார்த்த போதனைகளாகவும் மட்டுமே துறுத்துக்கொண்டு நிற்கின்றன.
திரைமொழியில் கவனம் செலுத்தியிருந்தால் இந்த ‘மெட்ராஸ்’ பயணம் கவனிக்க வைத்திருக்கும்.