ஒரே நாடு ஒரே தேர்தலால் நாட்டின் ஜிடிபி அதிகரிக்கும்: ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை

புதுடெல்லி: ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் அமல்படுத்தப்பட்டால் நாட்டின் ஜிடிபி 1 முதல் 1.15 சதவீதம் அதிகரிக்கக் கூடும் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராம்நாத் கோவிந்த் பேசியதாவது, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டம் அமல்படுத்தப்பட்டால் அது நாட்டின் பொருளாதாரத்தின் மிகப்பெரிய அளவில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் இந்தியாவின் ஜிடிபி 1 முதல் 1.15 சதவீதம் அதிகரிக்கக் கூடும்.

தற்போதைய தேர்தல் நடைமுறையின் மூலம் ஏறக்குறைய ரூ.5 லட்சம் கோடிகள் செலவாகின்றன என்பது ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளன. ஆனால் ஒரே நேரத்தில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தும்போது இது ரூ.50 ஆயிரம் கோடியாக குறையும்” இவ்வாறு ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

மக்களவையின் 543 தொகுதிகள், மாநிலங்களின் 4,120 சட்டப்பேரவைத் தொகுதிகள், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சிப் பதவிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த ஆண்டு செப்டம்பரில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை முன்னாள் தலைவர் குலாம் நபி ஆசாத், நிதி ஆணைய முன்னாள் தலைவர் என்.கே.சிங், மக்களவை முன்னாள் செயலர் சுபாஷ் கே காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, முன்னாள் ஊழல் கண்காணிப்பு ஆணையர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.

ராம்நாத் கோவிந்த் குழு பல்வேறு கட்ட ஆய்வுகளை நடத்தி கடந்த மார்ச் மாதம் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் 18,000 பக்கங்கள் கொண்ட அறிக்கையை சமர்ப்பித்தது. மக்களவை, மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும். இந்த தேர்தலுக்கு பிறகு அடுத்த 100 நாட்களில் நாடு முழுவதும் ஒரே கட்டமாக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். ஒரே வாக்காளர் பட்டியலை தயாரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை ராம்நாத் கோவிந்த் குழு அளித்துள்ளது. இந்த குழுவின் பரிந்துரைகளை மத்திய அரசு கடந்த செப்டம்பரில் ஏற்றுக் கொண்டது.

இதைத் தொடர்ந்து ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தொடர்பான மசோதா வரையறுக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அடுத்த வாரம் நாடளுமன்றத்தில் புதிய மசோதா தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.