EVKS Elangovan: காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் காலமானார்!

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.-வும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் (75) உடல்நலக்குறைவால் காலமானார்

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஏற்கெனவே இதய பாதிப்பிற்காக சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு, நுரையீரல் சளியால் மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கிறது. அதற்கு சிகிச்சையளிக்க சென்னையின் பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் ஐசியூ வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி அவர் இன்று உயிரிழந்திருக்கிறார். அரசியல் தலைவர்கள் அவருக்கு இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

EVKS ELANGOVAN

பெரியார் ஈ.வெ.ராமசாமியின் அண்ணன் ஈ.வெ.கிருஷ்ணசாமி. இவருடைய மகன் ஈ.வெ.கி.சம்பத். இவர் தமிழ் தேசியக் கட்சி, தி.மு.க, காங்கிரஸ் எனத் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தார். இவருடைய மகன் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன். தன் தந்தையான ஈ.வி.கே.சம்பத் பயணித்த அதே காங்கிரஸ் கட்சியில் தன்னையும் இணைத்துக்கொண்டு அரசியல் பயணத்தைத் தொடர்ந்தார். 1984-ம் ஆண்டு இந்திரா காந்தி சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதற்குப் பிறகு நடைப்பெற்ற தேர்தலில், காங்கிரஸ் எம்.எல்.ஏ வேட்பாளராக சத்தியமங்கலத்தில் முதல் முறையாக தேர்தலை எதிர்க்கொண்டு, வெற்றிப் பெற்றார்.

அதைத் தொடர்ந்து பல அரசியல் நிகழ்வுகளில் முக்கியப் பங்காற்றிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், 1996-2001 வரை தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக பணியாற்றினார். 2004-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு காங்கிரஸ் சார்பில் எம்.பி யாக தேர்வு செய்யப்பட்டு, நாடாளுமன்றத்தில் நுழைந்தார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில், ஜவுளித்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார்.

EVKS ELANGOVAN

அதற்குப் பிறகு அவர் போட்டியிட்டத் தேர்தல்களில் தொடர் தோல்வியால் ஈரோடு சட்டமன்றத் தொகுதியில், அவரின் மகன் திருமகன் ஈவெரா-வை வெற்றிப்பெறச் செய்து தேர்தல் அரசியலிருந்து விலகியிருந்தார். ஆனால், 2023-ம் ஆண்டு திருமகன் ஈவெரா மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அப்போது நடந்த இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். அதைத் தொடர்ந்து மீண்டும் தீவிர அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.