இன்று காலை காலமான காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் உடல் அரசியல் தலைவர்கள் மற்றும் பொது மக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை மணப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு அஞ்சலி செலுத்த வந்த மதிமுக பொதுசெயலாளர் வைகோ, “ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தலை சிறந்த பேச்சாளர், பண்பாளர். எந்த ஆபத்து மற்றும் எதிர்ப்பு வந்தாலும் பயப்படமாட்டார்.
ஒருமுறை, ஒரு குழுவினர் அவரது இந்த வீட்டை தாக்க வருகிறார்கள் என்று கேள்விப்பட்டு, நான் 50 பேருடன் இங்கு வந்து அவருடன் இரண்டு மணி நேரம் இங்கேயே காத்திருந்தேன்.
அவர் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து, தமிழ்நாட்டின் அரசியலுக்கும், பொது வாழ்வுக்கும் பெருஞ்சிறப்பு சேர்ப்பார். காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவார் என்று எண்ணியிருந்த நேரத்தில், யாரும் எதிர்பார்க்காதப்படி காலமாகிவிட்டார்.
சில நாட்களுக்கு முன்புக்கூட, அவருடன் ஒரே மேடையில் அமர்ந்திருந்தேன். ஆனால், இப்போது அவர் எல்லோரையும் விட்டுவிட்டு விண்ணுக்கு பறந்து சென்றுவிட்டார்.
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.
என்ற வள்ளுவனின் வாக்குகேற்ப, ‘நிலையாமை’ என்னும் சொல்லுக்கு இலக்கணமாக, அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தி சென்றுவிட்டார். இவரது இழப்பு காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கே பேரிழப்பு. மதிமுக சார்ப்பில் கண்ணீர் அஞ்சலி” என்று பேசினார்.