“அரசியல் சாசன பாதுகாப்பை பேசுவதன் மூலம் சாவர்க்கரை கேலி செய்கிறது பாஜக” – ராகுல் காந்தி

புதுடெல்லி: அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பது பற்றி பேசும் பாஜக, அதன்மூலம் வீr சாவர்க்கரை கேலி செய்கிறது என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

மக்களவையில் நடைபெற்ற அரசியல் சாசன விவாதத்தில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று (சனிக்கிழமை) உரையாற்றினார். அப்போது, “பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சித்தாந்தவாதியாகக் கருதப்படும் சாவர்க்கர், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்திய அரசியல் சாசனத்தில் எதுவும் இல்லை என்றும், அதற்குப் பதிலாக மனுஸ்மிருதியை ஏற்க வேண்டும் என்றும் கூறினார்.

அவர் என்ன கூறினார் என்பதை நான் அப்படியே கூறுகிறேன், ‘மனுஸ்மிருதி என்பது நமது இந்து தேசத்தில் வேதங்களுக்குப் பிறகு மிகவும் வணங்கப்படக்கூடிய வேதமாகும். நமது கலாச்சாரம், பழக்கவழக்கங்கள், சிந்தனை மற்றும் நடைமுறைக்கு பண்டைய காலத்தில் இருந்து அதுதான் அடிப்படை. நமது தேசத்தின் பல நூற்றாண்டு கால ஆன்மிக மற்றும் தெய்வீக அணிவகுப்பை இந்த புத்தகம்தான் குறிக்கிறது. மனுஸ்மிருதி இன்று சட்டமாக உள்ளது.’ இதுதான் சாவர்க்கர் கூறியவை. இதனால்தான் சண்டை நிகழ்கிறது. அரசியல் சாசனத்தைப் பாதுகாப்போம் என்று கூறுவதன் மூலம் நீங்கள் (பாஜக) சாவர்க்கரை கேலி செய்கிறீர்கள்.

சாவர்க்கர் குறித்து நான் எனது பாட்டியிடம் (இந்திரா காந்தி) கேட்டேன். அதற்கு அவர், சாவர்க்கர் ஆங்கிலேயர்களுடன் சமரசம் செய்து கொண்டதாகவும், அவர்களிடம் மன்னிப்பு கேட்டதாகவும் கூறினார். சாவர்க்கர் குறித்த எனது பாட்டியின் நிலைப்பாடு இதுதான்.

துரோணாச்சாரியார், ஏக்லைவனின் கட்டைவிரலை வெட்டியது போல், இந்தியாவில் இளைஞர்களின் கட்டைவிரலை பாஜக வெட்டுகிறது. மும்பையின் தாராவியை அதானிக்கு கொடுப்பதன் மூலம், ​​சிறு வணிகர்களின் கைவிரலை நீங்கள் வெட்டுகிறீர்கள். விளைபொருட்களுக்கு நியாயமான விலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் ஷம்பு எல்லையில் போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால் நீங்கள் அதானிக்கு பலன் தருகிறீர்கள்.

உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் பகுதியில் கும்பல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு பாதுகாப்பு இல்லை. அந்தப் பெண்ணின் குடும்பம் வேறு இடத்துக்கு மாற்றப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டு, நான்கு ஆண்டுகளாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதை அரசாங்கம் செய்யாவிட்டால், இண்டியா கூட்டணி செய்யும்” என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.