பாட்னா,
பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள யோகியா என்ற கிராமத்தில் கங்கா சஹ்னி என்பவருக்கு சொந்தமான டிராக்டரை நேற்று இரவு அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் திருடிச் செல்ல முயன்றுள்ளனர். சத்தம் கேட்டு எழுந்த கங்கா சஹ்னி, கிராம மக்களின் உதவியோடு ஷம்பு சஹ்னி என்ற இளைஞரை மடக்கிப் பிடித்தார்.
ஷம்பு சஹ்னியுடன் மேலும் 3 நபர்கள் இருந்ததாகவும், அவர்கள் தப்பி ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, ஷம்பு சஹ்னியை டிராக்டர் உரிமையாளர் கங்கா சஹ்னி மற்றும் மற்றும் அவரது அடியாட்கள் சேர்ந்து இரவு முழுவதும் கட்டி வைத்து அடித்துள்ளனர். இந்த தாக்குதலில் ஷம்பு உயிரிழந்த நிலையில், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து போலீசார் விரைந்து வந்து உயிரிழந்த ஷம்பு சஹ்னியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதோடு கங்கா சஹ்னி மற்றும் அவரது உறவினர் புக்கார் சஹ்னி ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்து, போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர்.