நொய்டா: உத்தரபிரதேசத்தில் பங்குச்சந்தையில் அதிக லாபம் ஈட்டலாம் என ஆசையை தூண்டி ரயில்வே அதிகாரி ஒருவரிடம் சுமார் ரூ.57 லட்சம் மோசடி செய்துள்ளனர்.
உ.பி.யின் கவுதம புத்தர் நகர் மாவட்டத்தை சேர்ந்த ரயில்வே அதிகாரி அனில் ரைனா. இவர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:
பங்குச் சந்தையில் முதலீடு செய்வதன் மூலம் பெரும் லாபம் ஈட்ட வாய்ப்புள்ளதாக எனக்கு செல்போனில் தகவல் வந்தது. அதன்படி தொடர்புகொண்டு நான் முதலீடு செய்ததில் தொடக்கத்தில் எனக்கு அதிக லாபம் காட்டினார்கள். ஆனால் மேலும் மேலும் முதலீடு செய்தால்தான் அந்தப் பணத்தை நான் எடுக்க முடியும் என்றார்கள். இதன்படி பல தவணைகளாக ரூ.56.88 லட்சம் வரை அனுப்பினேன். அதன் பிறகு அவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை” என்று கூறியுள்ளார்.
இப்புகார் விசாரணையில் இருப்பதாவும் பாதிக்கப்பட்டவர் பணம் அனுப்பிய வங்கிக் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் போலீஸார் கூறினர்.