திருவனந்தபுரம்: கேரளாவில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. கடந்த வியாழக்கிழமை பத்தாம் வகுப்பு ஆங்கில தேர்வும் பிளஸ் 1 கணிதத் தேர்வும் நடைபெற்றன. இந்த இரு தேர்வுகளின் வினாத்தாள்களும் கடந்த புதன்கிழமை வாட்ஸ்அப், யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
சில தனியார் டியூசன் மையங்கள் தங்களிடம் படிக்கும் மாணவ, மாணவியருக்கு வினாத்தாளை முன்கூட்டியே வினாத்தாள்களை வழங்கியிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து கேரள கல்வித் துறை அமைச்சர் சிவன் குட்டி கூறியதாவது:
பள்ளி அரையாண்டு தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக மாநில காவல் துறை தலைவர் மற்றும் சைபர் கிரைம் போலீஸில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. தனியார் டியூசன் சென்டர் நடத்தும் குறிப்பிட்ட ஒரு யூ டியூப் சேனல் வினாத்தாளை முன்கூட்டியே வெளியிட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் முழுமையாக விசாரணை நடத்தப்படும். தவறிழைத்தவர்கள் மீதும் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
வரும் திங்கள்கிழமை கேரள பள்ளி கல்வி துறையின் உயர்நிலை கூட்டம் நடைபெறுகிறது. அப்போது வினாத்தாள் கசிவால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும். பத்தாம் வகுப்பு ஆங்கிலம், பிளஸ் 1 கணிதத் தேர்வை மீண்டும் நடத்துவதா, வேண்டாமா என்பது குறித்து கூட்டத்தில் முடிவு செய்யப்படும். இவ்வாறு அமைச்சர் சிவன் குட்டி தெரிவித்தார்.
கேரள கல்வித் துறை வட்டாரங்கள் கூறியதாவது: வெளி மாநில அச்சகத்தில் வினாத்தாள்கள் அச்சடிக்கப்படுகிறது. அங்கிருந்து வினாத்தாள் கசிந்ததா அல்லது வினாத்தாளை தயாரித்த குழுவினர் வினாத்தாளை கசிய விட்டனரா என்பது குறித்து விசாரித்து வருகிறோம். தவறு இழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
வினாத்தாள் கசிவில் தனியார் டியூசன் மையங்களுக்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. தங்கள் டியூசன் மையங்களில் அதிக மாணவர்களை சேர்க்க அந்த மையங்கள் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றன. தவறு செய்த டியூசன் மையங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படும். அந்த மையங்களுடன் தொடர்புடைய அரசு பள்ளி ஆசிரியர்கள், கல்வித் துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.