குறைந்தபட்ச ஆதார விலை சட்டம் கோரி தஞ்சையில் விவசாயிகள் ரயில் மறியல்: 55 பேர் கைது

தஞ்சாவூர்: குறைந்தபட்ச ஆதார விலை சட்டத்தை கொண்டு வரக்கோரி தஞ்சாவூரில் ரயிலை மறித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அதில் பி.ஆர். பாண்டியன் உட்பட 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டம் கொண்டுவர வேண்டும் . விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஆதாரவிலை கேட்டு சாகும் வரை பஞ்சாப் மாநிலத்தின் கண்ணூரி பார்டரில் உண்ணாவிரதம் மேற்கொண்டு உயிருக்கு போராடிவரும் சம்யுக்த கிசான் மோர்ச்சா தலைவர் ஜெக்ஜித் சிங் டல்லேவாலோடு உடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் சம்யுக்த கிசான் மோர்ச்சா அமைப்பு சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

அதன்படி தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் போராட்டம் நடத்துவதற்காக தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் தலைமையில் மாநிலத் தலைவர் திருப்பதி வாண்டையார், மண்டல தலைவர் துரை. பாஸ்கரன், காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் தலைவர் ஏ.கே.ஆர். ரவிச்சந்தர் உள்பட ஏராளமான விவசாயிகள் திரண்டனர். பின்னர் ஊர்வலமாக புறப்பட்டு முதல் நடைமேடைக்கு வந்தனர். அப்போது திருச்சியில் இருந்து காரைக்கால் நோக்கி வந்த ரயிலை மறித்து தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் மத்திய அரசு எதிராகவும் கோஷமிட்டனர். இதையடுத்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பி.ஆர்.பாண்டியன் உள்பட 55 விவசாயிகளை போலீஸார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். அதன் பிறகு ரயில் காரைக்கால் நோக்கி புறப்பட்டது. இந்த சம்பவத்தால் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.