ஒடிசாவில் காட்டு யானை தாக்கியதில் சகோதரிகள் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள கன்டாபள்ளி கிராமத்தில் ஒரு குடும்பம் குடிசை வீட்டில் வசித்து வந்தது. இந்த கிராமம் போனாய் வனப்பகுதிக்கு அருகே உள்ளது. அங்கு காட்டு யானை ஒன்று நேற்று வந்து குடிசை வீட்டை சேதப்படுத்தியது. யானையை பார்த்ததும் வீட்டில் இருந்த பெரியவர்கள் அலறியடித்து ஓடினர். ஆனால், அந்த வீட்டில் சமியா முண்டா (12), சாந்தினி முண்டா (3) என்ற இரு சகோதரிகள் மட்டும் தூங்கி கொண்டிருந்தனர். அவர்களை காட்டு யானை மதித்து கொன்றது. இச்சம்பவம் அந்த கிராமத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.
இது குறித்து வனத்துறை அதிகாரி லலித் பத்ரா கூறியதாவது: வனப்பகுதிக்குள் சுற்றிக் கொண்டிருக்கும் யானையை தேடிக் கொண்டிருக்கிறோம். இது கூட்டத்தில் இருந்து பிரிந்து வந்த ஒற்றை ஆண் யானை. இந்த யானைக்கு ரேடியோ காலர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், அதில் உள்ள சிம் கார்டு வழங்கிய நிறுவனத்துக்கு இப்பகுதியில் நெட்வொர்க் இல்லை. இதனால் யானையைின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. யானை தாக்கியதில் உயிரிழந்த சகோதரிகளின் குடும்பத்திற்கு அரசு இழப்பீடு வழங்கும். இவ்வாறு லலித் பத்ரா கூறினார்.