சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘கங்குவா’ திரைப்படம் கடுமையாக விமர்சனங்களுக்கும், ட்ரோல்களுக்கும் உள்ளானது.
இப்படியான கடுமையான விமர்சனங்களால் அத்திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு திரையரங்கில் வசூலையும், வரவேற்பையும் பெறவில்லை. இதையடுத்து முதல் இரு வாரங்களுக்கு விமர்சிக்கக் கூடாது, திரையரங்க வளாகத்தில் மக்கள் ரீவ்யூவிற்கு அனுமதி வழங்கக் கூடாது என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முடிவெடுத்து, பிறகு அது பின்வாங்கப்பட்டது.
இந்த விஷயத்தில், “சிலர் கட்டம் கட்டி, உள்நோக்கத்துடன் தவறான நோக்கத்தில் கடுமையான விமர்சனங்களை செய்கிறார்கள். படத்தை விமர்சிக்க பத்திரிகையாளர்களுக்கு உரிமையுண்டு. ஆனால், தனிப்பட்ட வகையில் ஒருவரை விமர்சனம் செய்ய, தாக்கிப் பேச யாருக்கும் உரிமையில்லை” என்றெல்லாம் நடிகர் சத்யராஜ் உள்ளிட்ட பலரும் கருத்துத் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் ‘விடுதலை -2’ படம் வரும் டிசம்பர் 20ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அதற்கான புரோமோஷன் பணிகளில் தீவிரமாகியுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. அவ்வகையில் தெலுங்கு யூடியூப் சேனல் ஒன்றின் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு பேசியிருந்தார். அப்போது விஜய் சேதுபதியிடம், ‘சமீபத்தில் தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் சரியாக ஓடுவதில்லை’ என்றும் ‘சூர்யாவின் கங்குவா எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை’ என்றும் கேள்வி கேட்டிருந்தார்.
அதற்குப் பதிலளித்த விஜய் சேதுபதி, “நான் இங்கு ‘விடுதலை -2’ படத்தின் புரோமோஷனுக்காக வந்திருக்கிறேன். சம்பந்தமில்லாமல் இந்த கேள்வியெல்லாம் ஏன் கேட்கிறீர்கள். யாரும் தோல்வியடைய வேண்டும் என்று படங்கள் எடுப்பதில்லை. வெற்றி பெற வேண்டும் என்றுதான் எடுக்கிறார்கள். தோல்வி என்பது எல்லா நடிகர்களுக்கும் வரும். எனக்கும் வந்திருக்கிறது. நானும் ஒரு நான்கு ஆண்டுகள் எந்தவொரு ஹிட்டும் கொடுக்காமல் இருந்தேன். என்னையும் கடுமையாக ட்ரோல் செய்திருக்கிறார்கள். சினிமாவில் இது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம்.
ஒரு படம் வெளியாவதற்கு முன்பு அதைப் பலருக்கும் போட்டுக் காண்பித்து, அவர்களின் விமர்சனங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டு, தவறுகளைச் சரிசெய்து படத்தைத் திரைக்குக் கொண்டு வருகிறோம். எதிர்பார்த்தப்படி சில திரைப்படங்கள் வெற்றியடையும், சில திரைப்படங்கள் தோல்வியடையும். அது படத்தைப் பார்க்கும் மக்கள் கையில்தான் இருக்கிறது. படம் தோல்வியடைந்தால் அதிலிருந்து கற்றுக் கொண்டு, தவறுகளை சரி செய்துகொள்வோம். வெற்றி, தோல்வி யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம், எந்த திரைத்துறைக்கும் இது நடக்கும்” என்று பேசியிருக்கிறார்.