விஜயகாந்தின் மகனான சண்முகப் பாண்டியன் நடிப்பில் உருவாகியிருக்கிற திரைப்படம், `படை தலைவன்’.
இத்திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பலரின் கவனத்தையும் ஈர்த்தது. சமீபத்தில் வெளியான `லப்பர் பந்து’ திரைப்படத்தில் விஜயகாந்தின் `நீ பொட்டு வச்ச தங்கக் குடம்’ பாடல் பயன்படுத்தப்பட்டிருந்தது. இந்தப் பட ரிலீஸுக்கு பிறகு அந்த பாடலுக்கு பலரும் ரீ விசிட் அடித்தும் கொண்டாடினார்கள். அதுமட்டுமல்ல இன்றைய ஜென் சி-களும் அந்த பாடலுக்கு வைப் செய்தனர்.
தற்போது `படை தலைவன்’ திரைப்படத்தின் டிரைலரிலும் `நீ பொட்டு வச்ச தங்க குடம்’ பாடல் பயன்படுத்தப்படுத்தியிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, டிரைலரில் விஜயகாந்தின் உருவத்தை ஏ.ஐ மூலம் காட்சிப்படுத்தியிருந்தார்கள். இந்த விஷயங்கள் தொடர்பாக கூடுதல் தகவல்களை தெரிந்துகொள்ள இத்திரைப்படத்தின் இயக்குநர் அன்புவை தொடர்புக் கொண்டு பேசினோம்.
இது தொடர்பாக பேசுகையில், “இல்ல. லப்பர் பந்து திரைப்படத்தோட ரிலீஸுக்கு முன்னாடியே `பொட்டு வச்ச தங்க குடம்’ பாடலை `படை தலைவன்’ திரைப்படத்துல பயன்படுத்திட்டோம். இந்தப் படம் கொஞ்ச ரிலீஸ்லதான் தாமதமாகிடுச்சு. ஆனால் `லப்பர் பந்து’ படத்துக்கு முன்னாடியே நாங்க யூஸ் பண்ணிட்டோம்.
கேப்டனுக்கும் படத்தோட கதாநாயகன் சண்முகப்பாண்டியனுக்கும் உள்ள உறவை காட்டுறதுக்கு இந்த பாடல் சரியாக இருக்கும்னு நினைச்சேன். ” என்றவரிடம் டிரைலரின் இறுதியில் விஜயகாந்தின் ஏ.ஐ வருகிறேதே, `ஆமா, நிச்சயமாக அது சப்ரைஸ் எலமென்ட்டாக இருக்கும். கேப்டன் ரசிகர்களுக்கு அதுவொரு தனி எலமென்ட்டாக இருக்கும். இது முழுக்க முழுக்க ஒரு கமர்சியல் திரைப்படம். ஆனால் கேப்டன் ரசிகர்களையும் இந்த திரைப்படம் என்கேஜ் பண்ணிடும்.
`எங்க அப்பா இங்க இருந்திருந்திருந்தா , உன்னுடைய உசுரை காப்பாத்துனு சொல்லியிருப்பார்’ என டிரைலரின் இறுதியில் ஒரு வசனம் விஜயகாந்தின் பண்பை விவரிக்கும் வகையில் இருந்தது. இது தொடர்பாக கேட்கையில், “அந்த வசனம் கதைக்கு ரொம்ப தேவைப்பட்டது. இந்த சமயத்துல அந்த வசனம் எல்லோருக்கும் கனெக்ட்டாகும்னு வச்சோம்.
விஜய்காந்த் சார் ஏ.ஐ-ல வர்றதுனால அவரை பற்றி ரீ கலெக்ட் பண்றதுக்காக டிரைலர்ல இந்த வசனத்தையும் சேர்த்திட்டோம். ” என்றவரிடம், ` இந்தப் படத்தில் கஸ்தூரி ராஜாவும் நடித்திருக்கிறாரே’ எனக் கேட்டதும், “ முதல்ல அவர்கிட்ட கதை சொன்னோம். அவருக்கு இந்த கதை ரொம்ப டச் பண்ணின மாதிரி இருந்ததும் படத்துக்கு ஓகே சொல்லிட்டார். ” எனக் கூறி முடித்துக் கொண்டார்.