18-வது உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம் 11 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு சாம்பியன் பட்டதைக் கொண்டு வந்திருக்கிறார் தமிழக வீரர் குகேஷ். இறுதிப் போட்டியில் சீனாவின் டிங் லிரனை வீழ்த்தி தனது 18-வது வயதில் இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கும் குகேஷ், இளம் உலக செஸ் சாம்பியன் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார். இதுமட்டுமல்லாமல், சர்வதேச செஸ் கூட்டமைப்பான FIDE குகேஷுக்கு ரூ. 11.45 கோடி பரிசுத்தொகையையும் அறிவித்திருக்கிறது.
இந்த நிலையில், FIDE க்கு அளித்த சிறப்பு நேர்காணலில் தனது பெற்றோர்களால்தான் இந்த வெற்றி சாத்தியமானது எனத் தெரிவித்திருக்கும் குகேஷ், “நான் செஸ் விளையாடத் தொடங்கியபோது, குடும்பமாக நாங்கள் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. என் பெற்றோர்கள் நிறைய தியாகம் செய்தார்கள். பொருளாதார ரீதியாக நிறைய கஷ்டங்களை எதிர்கொண்டனர். ஆனால், இன்று நாங்கள் ஒரு நல்ல நிலைமையில் இருக்கிறோம். இனிமேல், இது போன்ற கஷ்டங்கள் எதுவும் இருக்காது.
எனக்கு என் அப்பா அம்மா தான் எல்லாமே. ஒரு சிறந்த செஸ் வீரராக இருப்பதை விட, நல்ல மனிதனாக இருப்பதே சிறந்தது என்று என்னுடைய அம்மா அடிக்கடி சொல்வார். செஸ் பற்றி நீங்கள் எவ்வளவு அதிகமாக கற்றுக் கொள்ளும்போது, அவ்வளவு குறைவாகவே உங்களுக்குத் தெரியும் என்பது புரியும். சிறந்த வீரர்கள் கூட தவறுகள் செய்கின்றனர். நான் ஒவ்வொரு முறை விளையாடும்போதும் புதிதான ஒன்றை கற்றுக்கொள்வேன்.
ஒரு நல்ல போட்டியில் தோல்வியடைந்தால் கண்டிப்பாக வருத்தப்படுவேன். அதேசமயம், சரியாக விளையாடாதபோதும் அந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் மகிழ்ச்சியடைவேன். பயணம் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு இலக்குகளும் முக்கியம். எல்லாவற்றையும் விட, நான் ஏன் செஸ் விளையாடுகிறேன் என்றால் அது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.” என்று கூறினார்.
தோனி தான் தன்னுடைய ரோல் மாடல் என்று குகேஷ் கூறியிருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிக்கொண்டிருக்கும் நிலையில், “நல்ல கிரிக்கெட்டர் என்பதை விட, நல்ல மனிதர் என்று மக்கள் என்னை நினைவு கூறவேண்டும் என்பதையே விரும்புகிறேன்.” என தோனி அடிக்கடி கூறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…