பெங்களூரு,
கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் இடப்பனூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட ஜூலமேரா கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கையா. கூலி தொழிலாளி. இவரது மருமகள் ஜாலம்மா. ராமலிங்கையாவின் மகன் கூலி வேலை செய்து வருகிறார். தினமும் அவர் வேலைக்கு செல்லும் நேரத்தில் ராமலிங்கையா, மருமகள் ஜாலம்மாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. அத்துடன் 3 முறை ஜாலம்மாவை பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் தெரிகிறது. இதுதொடர்பாக அக்கம்பக்கத்தினர் ராமலிங்கையாவுக்கு அறிவுரை கூறி வந்தனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டுக்குள் நுழைந்த ராமலிங்கையா, ஜாலம்மாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன், தனது ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஜாலம்மா கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்தார். இதனால் கோபம் அடைந்த ராமலிங்கையா, ஜாலம்மாவை சரமாரியாக தாக்கினார்.
பின்னர் மரக்கட்டையை கொண்டு அவரது தலையில் ஓங்கி அடித்தார். இதில் படுகாயம் அடைந்த ஜாலம்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த ராமலிங்கையா அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதற்கிடையில் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, ஜாலம்மா பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின்பேரில் விரைந்து வந்த போலீசார் ஜாலம்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ராமலிங்கையாவை வலைவீசி தேடி வருகின்றனர். ஆசைக்கு இணங்க மறுத்த மருமகளை, மாமனார் அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.