சென்னை: கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ள பகுதியில், மழைநீர் கால்வாய் பணியும் நடைபெறுவதால், பணிகள் மேலும் தாமதமாக வாய்ப்பு உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் 88 ஏக்கரில் ரூ.393.71 கோடியில் கட்டி திறக்கப்பட்டது. சென்னையில் இருந்து வெளியூருக்கு செல்லும் 80 சதவீத அரசு பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்படுகின்றன. ஆனால், இங்கு புறநகர் ரயில் நிலையம் இல்லாததால், இணைப்பு மின்சார ரயில் சேவை இல்லாமல் உள்ளது.
இதனால், பேருந்து நிலையம் வந்து செல்லும் பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதையடுத்து, கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையில் அடிப்படையில், வண்டலுார் ரயில் நிலையத்தை அடுத்து கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் கடந்த ஜன. 2-ம் தேதி தொடங்கின.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் இந்த ரயில் நிலையம் அமைகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பணிகளை முடிக்க திட்டப்பட்டது. திட்டமிட்ட காலம் முடிந்து, பல மாதங்கள் ஆகிவிட்டன. இன்னும், பணிகள் முடியவில்லை. இதற்கிடையே, இந்த ரயில் நிலையத்தின் கீழ் பகுதியில், மழைநீர் கால்வாய் அமைக்க உள்ளதால், ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் மேலும் தாமதமாக வாய்ப்பு உள்ளது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: வண்டலூர் – கூடுவாஞ்சேரி இடையே கிளாம்பாக்கத்தில் ரூ.20 கோடியில் புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. 3 நடைமேடைகள், ரயில் நிலை மேலாளர் அறை, டிக்கெட் அலுவலகம், வாகன நிறுத்தம், சி.சி.டி.வி., கேமராக்கள், நடைமேம்பாலம், நகரும்படிக்கட்டுகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளோடு பணிகள் நடந்து வருகின்றன. தற்போது, ஒரு நடைமேடையில் பணி முடியும் நிலையில் உள்ளது.
இந்த ரயில் நிலையத்தின் கீழ் பகுதியில், கூடுதலாக ஒரு மழைநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என்று தெற்கு ரயில்வேக்கு தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. இதற்கான பணிகளும் நடக்க உள்ளன. இதனால், இந்த ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் மேலும் தாமதமாகும். வரும் ஆகஸ்ட் மாதத்தில், இந்த பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.