“மார்ச் 2026-க்குள் நக்சலிசத்தை ஒழிக்க வேண்டும்” – உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தல்

ராய்ப்பூர்: 2026ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இடதுசாரி தீவிரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்க அனைத்து பாதுகாப்புப் படைகளும் கூட்டு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார்.

நக்ஸல் தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமான சத்தீஸ்கரில் பாதுகாப்பு தொடர்பான உயர் ஆலோசனைக் கூட்டம் நேற்று (திங்கள் கிழமை) நடைபெற்றது. உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய், துணை முதல்வர் விஜய் ஷர்மா, மத்திய உள்துறை செயலர் கோவிந்த் மோகன், சத்தீஸ்கரின் தலைமைச் செயலர், காவல்துறை இயக்குநர் ஜெனரல் மற்றும் மத்திய ஆயுதக் காவல் படைகளின் (சிஏபிஎஃப்) இயக்குநர் ஜெனரல்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், சத்தீஸ்கரில் இடதுசாரி தீவிரவாதத்தின் (LWE) நிலைமை குறித்து மதிப்பிடப்பட்டது. அப்போது பேசிய அமித் ஷா, “சத்தீஸ்கர் காவல்துறை மற்றும் பிற பாதுகாப்புப் படைகள் நக்சலிசத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட முறையில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு, கடந்த ஓராண்டில் நக்ஸல்களுக்கு அதிகபட்ச சேதத்தை ஏற்படுத்தியுள்ளன. இது மிகப்பெரிய வெற்றியாகும்.

வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகளின் மூலம் நக்சலைட்டுகளின் மன உறுதியை உடைத்ததோடு, சிவில் உரிமைகள், வளர்ச்சிப் பணிகள் மற்றும் சிறப்புத் தொகுப்புகள் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை பிரதான நீரோட்டத்தில் மோடி அரசு சேர்க்கிறது. வரும் நாட்களில் சத்தீஸ்கர் நக்சலிசத்தில் இருந்து முற்றிலும் விடுபட்டு வளர்ச்சிப் பணிகளில் நாட்டின் முன்னணி மாநிலமாக மாறப்போகிறது.

2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இடதுசாரி தீவிரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்கும் இலக்கை அடைய அனைத்து படைகள் மற்றும் ஏஜென்சிகளும் கூட்டு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த முயற்சியில் தேசிய புலனாய்வு முகமை மிக முக்கிய பங்கு வகிக்கும்” என்று ஷா கூறினார்.

முன்னதாக, பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள பாதுகாப்புப் படைகளின் தளத்தை அவர் பார்வையிட்டார். மேலும், பாதுகாப்புப் படைகளின் செயல்பாட்டுத் தயார்நிலையையும் அவர் ஆய்வு செய்தார்.

சத்தீஸ்கரில் நக்ஸல் தீவிரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பணிகளில் CRPF, ITBP, BSF, சத்தீஸ்கர் போலீஸ் மற்றும் மாவட்ட ரிசர்வ் காவலர் (DRG) ஆகிய படைகள் இணைந்து நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.