சுதேச மருத்துவ துறையை பிரதான மூன்று பிரிவுகளின் கீழ் அபிவிருத்தி செய்வதற்கு எதிர்பார்ப்பதாகவும், அந்தத் துறைகளின் பங்களிப்பாக சுற்றுலாக் கைத்தொழில் ஊடாக 8500 மில்லியன் டாலர் வருமானத்தை ஈட்டிக்கொள்ளும் இலக்கை எதிர்பார்ப்பதாகவும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
சுகாதாரத் துறை அமைச்சராக கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் சுதேச மருத்துவ அமைச்சின் செயற்பாடுகளை கண்காணிக்கும் விஜயமொன்றை மேற்கொண்ட போது அவ்வமைச்சின் அதிகாரிகள் உட்பட ஊழியர் குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
இம்மேற்பார்வை விஜயத்தில், உள்நாட்டு வைத்திய சேவையில் காணப்படும் குறைபாடுகளை ஆராய்ந்த அமைச்சர், தீர்வுகளை வழங்கக் கூடியதாக அடையாளம் காணப்பட்ட சில பிரச்சனைகளுக்கு விரைவாக தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்குத் திட்டமிட்டதுடன், ஏனைய திட்டங்களை தயாரிப்பதற்கு நீண்ட கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
உள்நாட்டு வைத்திய முறையை முன்னேற்றும் இலக்குடன் இத்துறையுடன் இணைந்ததாக, சுதேச மருத்துவ முறையின் தனித்துவமான அம்சங்களைக் கண்டறிந்து, அவற்றை சுற்றுலாத் துறையுடன் இணைத்து, சுற்றுலாக் கைத்தொழிலை மேம்படுத்துவதும் அரசாங்கத்தின் பிரதான நோக்கம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.