இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி, நாசர், வடிவுக்கரசி, பாரதிராஜா, தம்பி ராமையா, கருணாகரன், அனன்யா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘திரு.மாணிக்கம்’.
இத்திரைப்படம் டிசம்பர் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இதையொட்டி இன்று இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் சமுத்திரக்கனி, வடிவுக்கரசி, அமீர், லிங்குசாமி, விக்ரமன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். இவ்விழாவில் தனது திரைப்பயணம் குறித்து உருக்கமாகப் பேசிய நடிகர் சமுத்திரக்கனி, “முதன் முதல சீரியல் சூட்டிங் ஒன்னுல ஒரு சின்ன கேரக்டர்ல நடிக்கப் போயிருந்தேன். அப்போ ரொம்ப ஒல்லியா இருந்தேன். என்ன பார்த்து இயக்குநர் என்ன நெனச்சாருனு தெரியல பக்கத்துல இருந்த ஒருத்தன கூப்பிட்டு, ‘அவன உதைக்கிற மாதிரி ஒரு சீன் இருக்கு, நீ அவன உதைக்கிற உதையில அவன் போய் வெளிய விழனும். அதுகப்புறம் அவனுக்கு சினிமா ஆசையே வரக்கூடாது. சினிமாவ நெனச்சே பார்க்கக் கூடாது’ எனச் சொன்னார்.
அந்த சீன்ல பயங்கரமா பலமுறை உதை வாங்கினேன். ஆனால், சினிமா கனவை ஒருபோதும் விடல. பின்னாடி, அந்த இயக்குநர் கிட்டையே வேலை பார்த்தேன். அவர் என்னை விடவேயில்லை. என்னை உதைச்ச அந்த நடிகர் இன்னும் இருக்கார். இப்பவும் என்ன பார்த்தா மன்னிப்புக் கேட்பார். அன்றைக்கு உதைச்ச அந்த உதையிலதான் இன்னைக்கு இங்க வந்து விழுந்திருக்கேன். இப்படி பல கட்டங்களைக் கடந்து கடந்துதான் இப்போ நடிகராக, இயக்குநராக நின்று இருக்கேன். நேர்மையும், உழைப்பையும் நம்பி மட்டுமே பயணத்திருக்கிறேன்” என்று மனம் திறந்து பேசியிருக்கிறார்.