புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டசபைகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பான, ஒரே நாடு ஒரே தேர்தல் திருத்த மசோதாவை மக்களவையில் மத்திய சட்ட மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் இன்று தாக்கல் செய்து பேசினார். இந்த மசோதாவை தாக்கல் செய்வதற்கான ஆதரவு உறுப்பினர்களின் எண்ணிக்கை, எதிர்ப்பு உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட அதிகம். மசோதாவை தாக்கல் செய்வதற்கு ஆதரவாக 269 உறுப்பினர்களும், எதிராக 198 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
இதனை தொடர்ந்து, நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவையில் அரசியல் சாசனம் பற்றிய 2 நாள் விவாதத்தின் முடிவாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று பேசினார். அவர் பேசும்போது, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மேற்கொண்ட அரசியல் சாசன திருத்தங்களை பற்றி ஒப்பிட்டு பேசினார்.
நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரானது, அரசியல் அமைப்புக்கு எந்த கட்சி கவுரவம் அளித்தது, எந்த கட்சி கவுரவம் அளிக்கவில்லை என்று மக்கள் நன்றாக புரிந்து கொள்ள உதவும் என்று கூறியுள்ளார். அரசியல் சாசனத்திற்கு யார் மதிப்பளித்தது? யார் துரோகம் செய்தது என மக்கள் முடிவு செய்யட்டும் என்றும் கூறினார்.
அவருடைய பேச்சின்போது முன்னாள் பிரதமர்களான ஜவகர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தி ஆகியோரை கடுமையாக தாக்கி பேசினார். அரசியலமைப்பை ஒரு குடும்பத்தின் தனிப்பட்ட ஆதிக்கத்திற்கு உட்பட்ட ஒன்றாக காங்கிரஸ் கருதியது என்றும் குற்றச்சாட்டாக கூறினார்.
காங்கிரஸ், அதனுடைய 55 ஆண்டு கால ஆட்சியில், நம்முடைய அரசியலமைப்பில் 77 திருத்தங்களை மேற்கொண்டது. ஆனால், பா.ஜ.க. தன்னுடைய 16 வருட கால ஆட்சியில் 22 முறையே திருத்தங்களை செய்துள்ளது என்றும் பேசியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி, அரசியல் லாபத்திற்காக அரசியல் சாசனத்தின் அடிப்படை பிரிவுகளை மாற்றியமைத்தது. ஆனால், பா.ஜ.க.வோ குடிமக்களை அதிகாரம் படைத்தவர்களாக மாற்றவும் மற்றும் நிர்வாக தன்மையை மேம்படுத்துவதிலுமே கவனம் செலுத்தியது என்று கூறியுள்ளார். மறைந்த முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு, பிரிவு 19(1)(ஏ)-ன் கீழ் வரக்கூடிய கருத்துகளை வெளியிடுவதற்கான உரிமையை 1951-ம் ஆண்டில் குறைத்து விட்டார் என அமித்ஷா குற்றச்சாட்டாக கூறினார்.