வசூலில் வேட்டையாடிக் கொண்டிருக்கிறது `புஷ்பா 2′.
அல்லு அர்ஜூன் இத்திரைப்படத்தின் புஷ்பா கதாபாத்திரத்திற்காக அவ்வளவு மெனகெட்டிருக்கிறார். அந்த அசாதாரண உழைப்பும் படத்தில் வெளிப்பட்டிருக்கிறது. கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடிகை ஶ்ரீ லீலா வந்திருக்கிறார். அவர் படத்தில் வரும் அந்தப் பாடல்தான் தற்போதைய சமூக வலைதளப் பக்க வைரல். அந்தப் பாடலை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என நான்கு மொழியிலும் தமிழ் சுயாதீன இசைக்கலைஞர் சுப்லாஷினி பாடியிருக்கிறார். சமீபத்தில் வெளியான `Golden Sparrow’ பாடல் மூலம் கவனம் ஈர்த்தவர். இந்தப் பாடலுக்காக வாழ்த்துகளைக் கூறி அவரிடம் பேசினேன்.
பேச தொடங்கிய சுப்லாஷினி, “ என்னுடைய `Golden Sparrow’ பாடலைக் கேட்டுட்டு என்னுடைய குரல் பிடிச்சு இந்த `Kissik’ பாடலுக்கு என்னைக் கூப்பிட்டாங்க. இந்த பாடலுடைய தெலுங்கு வெர்ஷனைதான் முதல்ல பாடினேன். அதன் பிறகு என்னுடைய குரல் இந்த பாடலுக்குப் பொருந்திப்போகுதுன்னு அடுத்தடுத்து தமிழ், கன்னடம், இந்தின்னு பாட சொன்னாங்க. டி.எஸ். பி சார் ஃப்ரஷாக, தனித்துவமான குரலை இந்த பாடலுக்கு தேடிட்டு இருந்தார். அந்த தேடல்ல இருக்கும்போதுதான் டி.எஸ்.பி சார் `Golden Sparrow’ பாடலை கேட்டிருக்கார்.
`என்னுடைய குரல் நல்லா இருக்கு, ரொம்ப போல்ட்டாக இருக்குன்னு என்னை தேர்ந்தெடுத்தார். இப்படிதான் `கிஸ்ஸிக்’ வாய்ப்பு எனக்கு கிடைச்சது. உண்மையை சொல்லணும்னா, `Golden Sparrow’ பாடல்னால பின்னணி பாடல்களிலும், சுயாதீன பாடல்களிலும் நிறைய வாய்ப்புகளின் கதவு திறந்திருக்கு. அந்த பாடல் என்னுடைய கரியர்ல எனக்கு ஒரு நல்ல தொடக்கம். `கோல்டன் ஸ்பாரோவ்’ பாடல் 100 மில்லியன் வியூஸ் தாண்டி போயிட்டு இருக்கு. அந்தப் பாடலோட நம்பர்ஸ் பற்றி நான் யோசிக்கவே இல்ல. அந்த பாடல் வெளில வரணும்னுதான் என்னுடைய மனசுல இருந்தது.
என்னுடைய குரல்ல வந்துட்டாலே பெரிய விஷயம்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனா;, அந்தப் பாடல்தான் எனக்கு பல வாய்ப்புகளை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கு. எவ்வளவு பாடல்கள்ல ஒரு சிங்கருக்கான பெயர் கிடைச்சிருக்கு. ஒரு பாடல் ஹிட்டாகும். ஆனால், அந்த பாடல்ல அவங்க ஒரு பகுதியாக இருப்பாங்க. அவ்வளவுதான். அதுமாதிரிதான் `Golden Sparrow’ நேரத்துல பெரிய எதிர்பார்ப்புகள் வச்சுகல. எனக்குனு ஒரு பெயர் இந்த பாடல்ல உருவானது பெரிய ஆச்சரியம்தான். இவ்வளவு நம்பர்ஸை அந்த பாடல் கொண்டு வந்ததும் எனக்கு ரொம்ப சந்தோஷம்.” என்றவர், “ இப்போ கிஸ்ஸிக் பாடலுக்கு நிறைய பேர் என்னுடைய டோன் நல்லா இருக்குனு சொல்றாங்க.
இதுவரைக்கு நான் தமிழ் பாடல்தான் பாடியிருக்கேன். இப்போ “Kissik’ பாடலை கேட்டுட்டு தெலுங்கு ஆடியன்ஸும் என்னுடைய சுயாதீன பாடல்களை கேட்கிறாங்க. அதை கேட்டுட்டு `வரிகள் புரியல. ஆனால், பாடல் நல்லயிருக்கு’னு சொல்றாங்க. இந்த பாடல் இயக்குநர் சுகுமார் சாருக்கு மட்டும் பிடிச்சிருந்ததாக டி.எஸ்.பி சாரோட டீம் சொன்னார். குழந்தைப் பருவத்துல நம்ம கேட்ட டான்ஸ் நம்பர் பாடல்களெல்லாம் டி.எஸ்.பி சாரோடதுதான். முதல்ல இந்த பாடல் `புஷ்பா 2′ திரைப்படத்துக்குதான்னு எனக்குத் தெரியாது. எனக்கு ரிலீஸ் சமயத்துலதான் இந்தப் பாடல் `புஷ்பா -2 ‘ படத்துல வரப்போகுதுனு தெரியும். நம்ம சின்ன வயசுல இருந்து அதிகமாக ரசிச்ச ஒருவருடைய இசைல பாடினது ரொம்ப முக்கியமான விஷயமாக பார்க்கிறேன் ” என்றார்.
“இந்த மாதிரி டான்ஸ் நம்பர் பாடினதுக்குப் பிறகு ஸ்டிரியோடைப் பண்ணி இதே மாதிரியான பாடல்களுக்குத் தொடர்ந்து கூப்பிடுவாங்கனு தயக்கம் இருந்ததா?” எனக் கேட்டோம். இதற்கு பதில் கொடுத்த அவர், “ இப்போ வரைக்கு தயக்கப்படுகிற ஸ்டேஜ்ல நான் இல்ல. நமக்கு என்ன மாதிரியான பாடல்கள் வேணும்னு அதை உருவாக்குபவர்தான் சுயாதீன இசைக்கலைஞர்கள். இப்போ பின்னணி பாடகராக எனக்கு கிடைக்கிற வாய்ப்புகளை நான் பயன்படுத்திகிறேன். எனக்கான பாடல்களை சுயாதீன இசைக்கலைஞராக நான் பண்ணிக்கிட்டு இருக்கேன்.
அதுபோல பேலன்ஸ் பண்ணிதான் போயிட்டு இருக்கேன். நம்மளால எல்லாமே பாட முடியும்னு ஒரு பன்முகத்தன்மையையும் நாம காமிக்கணும். அப்போதான் இவங்களால மெலடி, டான்ஸ் நம்பர்னு எல்லா பாடல்களையும் பாட முடியும்னு நம்பிக்கை வரும். முன்னாடி ஐ.டில வேலை பார்த்துக்கிட்டே பாடல்களுக்கான வேலைகளை பார்த்துட்டு இருந்தேன். இப்போ அந்த விஷயத்தை யோசிக்கும்போது `எப்படி அதையெல்லாம் பண்ணினோம்’னு தோணுது. இப்போ பாடல்களுடைய வேலைகளே ரொம்ப டைட்டாக இருக்கு. எல்லாத்துக்கு காரணம் `Golden Sparrow’தான்.” என மகிழ்ச்சியோடு முடித்துக் கொண்டார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…