அம்பேத்கர் குறித்த பேச்சுக்கு அமித் ஷா மன்னிப்பு கோர வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்

புதுடெல்லி: அம்பேத்கர் குறித்து அமித் ஷா பேசிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவர் மன்னிப்பு கோர வலியுறுத்தியும் எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (புதன்) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்பட மக்களவை மற்றும் மாநிலங்களவையைச் சேர்ந்த எதிர்க்கட்சி எம்பிக்கள் ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இந்திய அரசியலமைப்புச் சிற்பியை அமித் ஷா அவமதித்துவிட்டதாகவும் தனது பேச்சுக்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

அமித் ஷாவின் பேச்சை கண்டித்துப் பேசிய காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய், “அரசியலமைப்பு விவாதத்தின் போது நேற்று(செவ்வாய் கிழமை) மாநிலங்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, டாக்டர் பி.ஆர். அம்பேத்கரை இழிவுபடுத்திவிட்டார். பாஜகவினருக்கு அம்பேத்கர் மீது மரியாதை இல்லை என்பதையே இது காட்டுகிறது. அம்பேத்கரின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாகவும், அவர் வாழ்ந்த காலத்தில் அவர் எழுப்பிய பிரச்சினைகளுக்கு ஆதரவாகவும் இண்டியா கூட்டணி சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது” என கூறினார்.

காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கூறுகையில், “அம்பேத்கர் மீது தனக்குள்ள எதிர்மறை மனப்பான்மையை அமித் ஷா நேற்று வெளிப்படுத்தினார். நாங்கள் அவருக்கு ‘அம்பேத்கர் வாழ்க’ என்று கூற முயற்சிப்போம். ஏனெனில், அவரால் அம்பேத்கரின் மரபை புல்டோசர் கொண்டு எதுவும் செய்ய முடியாது. அம்பேத்கர் மரபு என்பது ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி மற்றும் பிற சிறுபான்மையினரின் ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்காக குரல் கொடுப்பது. சாவர்க்கரின் சிந்தனை அம்பேத்கருக்கு எதிராக இருக்கும். நாங்கள் அவர்களை வெற்றி பெற அனுமதிக்க மாட்டோம். நாங்கள் அதை எதிர்த்துப் போராடுவோம். அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்” என வலியுறுத்தினார்.

மற்றொரு காங்கிரஸ் எம்பி கே.சுரேஷ் கூறுகையில், “உள்துறை அமைச்சர் அமித் ஷா, டாக்டர் பி.ஆர். அம்பேத்கரை அவமதித்துள்ளார். டாக்டர் பி.ஆர். அம்பேத்கருக்கு எதிரான இந்த கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்” என கூறினார்.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சிஆர் கேசவன், ​​“நேற்றைய பேச்சு, அரசியலமைப்புக்கு எதிராக காங்கிரஸ் கட்சி செய்த வரலாற்று துரோகங்களையும், மன்னிக்க முடியாத பாவங்களையும் அம்பலப்படுத்தியது. காங்கிரஸ் கட்சி மீண்டும் மீண்டும் துஷ்பிரயோகம் செய்து, குடும்ப அரசியலை வலுப்படுத்த நமது அரசியலமைப்பை மாற்றியமைக்க முயற்சித்தது” என குற்றம் சாட்டினார்.

அரசியலமைப்புச் சட்டத்தின் 75வது ஆண்டைக் குறிக்கும் விவாதத்தின் போது மாநிலங்களவையில் உரையாற்றிய அமித் ஷா, “பி.ஆர். அம்பேத்கரின் பெயரை பயன்படுத்துவது இப்போது ஒரு “பேஷன்” ஆகிவிட்டது. எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்று பேசுகிறார்கள். கடவுளின் பெயரை இவ்வாறு பலமுறை சொன்னாலாவது அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும்.

அம்பேத்கரின் பெயரை 100 மடங்கு அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால், அவரைப் பற்றிய உங்கள் உணர்வு என்ன என்பதை நான் கூற விரும்புகிறேன். ஜவஹர்லால் நேரு தலைமையிலான அரசாங்கத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து முதல் அமைச்சரவையில் இருந்து பி.ஆர்.அம்பேத்கர் ராஜினாமா செய்ய நேரிட்டது. பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினரை நடத்துவதில் திருப்தி இல்லை என்று அம்பேத்கர் பலமுறை கூறியுள்ளார். அவருக்கு ஒரு உத்தரவாதம் வழங்கப்பட்டது. அந்த உத்தரவாதம் நிறைவேறாததால், அவர் ராஜினாமா செய்தார்” என்று கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.