`வரி ஏய்ப்பு செய்ததாக லஞ்சம்' – ஜி.எஸ்.டி துணை ஆணையர் வீட்டில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை!

மதுரை மாவட்டம், அப்பன்திருப்பதி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 24ம் தேதி, மதுரை மத்திய ஜி.எஸ்.டி கண்காணிப்பாளர்கள் அசோக், ராஜ்பீர் சிங் ரானா உள்ளிட்டோர், கார்த்திக் வீட்டிற்கு சென்றனர். அப்போது வரி ஏய்ப்பு செய்து, ரூ.2 கோடி மதிப்பில் வீடு கட்டியிருப்பதாகவும், வரி ஏய்ப்பு செய்துள்ளதால் அபராதமாக ரூ. 1.50 கோடி செலுத்த வேண்டும் என்றதுடன் அலுவகத்தில் விளக்கம் அளிக்குமாறு கூறிச் சென்றுள்ளனர்.

துணை ஆணையர் சரவணக்குமார் வீட்டில் காத்திருந்த அதிகாரிகள்

அதன்படி, இது குறித்து மதுரையில் உள்ள ஜி.எஸ்.டி அலுவலகத்திற்கு சென்று தனது விளக்கத்தை கார்த்திக் அளித்துள்ளார். அப்போது, அசோக், ராஜ்பீர் சிங் ரானா உள்ளிட்ட அலுவலர்கள், ஜி.எஸ்.டி துணை ஆணையர் சரவணக்குமாரிடம் அழைத்து சென்றுள்ளனர். அப்போது, துணை ஆணையர் சரவணக்குமார், அனைத்து ஜி.எஸ்.டி-யும் குறைத்து கணக்கு காண்பிக்கவும், புகார் பிரச்னையை முடிக்கவும், ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும் என லஞ்சம் கேட்டதாக சொல்லப்படுகிறது.

இதில் அதிர்ச்சியடைந்து, லஞ்சம் கொடுக்க விரும்பாத கார்த்திக், மதுரை சி.பி.ஐ., லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி கலைமணியிடம் கடந்த 2ம் தேதி புகார் அளித்தார். அவர்களின் அறிவுறுத்தலின் படி கார்த்திக் நேற்று ரூ. 3.50 லட்சத்தை துணை ஆணையர் சரவணக்குமார், கண்காணிப்பாளர் அசோக், ராஜ்பீர் சிங் ரானா உள்ளிட்டோரிடம் கொடுக்க… அப்போது மூன்று பேரையும் சி.பி.ஐ லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.

சோதனைக்கு வந்த சி.பி.ஐ லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள்

இந்நிலையில், சி.பி.ஐ., டி.எஸ்.பி., தண்டாயுதபாணி தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அதிகாரிகள் குழு தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுாரில் துணை ஆணையர் சரவணக்குமாருக்குச் சொந்தமான வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் சி.பி.ஐ., அதிகாரிகள் பல மணி நேரம் வாசலில் காத்திருந்தனர். அதன் பின்னர், சரவணக்குமாரின் சகோதரர் கண்ணன் வந்து வீட்டு சாவியை கொடுத்த பிறகு சோதனை நடத்தினர். கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் நடைபெற்ற போராட்டத்தில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.