`கலகலப்பு-க்கு பிறகும் கோதண்டராமனால் ஒரு ரவுண்ட் வர முடியாம போச்சு; ஏன்னா..!’ – உருகும் தளபதி தினேஷ்

சுந்தர்.சி.யின் ‘கலகலப்பு’ படத்தின் ‘வெட்டுப்புலி’ சந்தானத்தின் காமெடி கைத்தடிகளில் ஒருவராக கவனம் ஈர்த்தவர் கோதண்டராமன். ஸ்டண்ட் யூனியன் உறுப்பினராக இவரை திரையுலகில் ‘பேய்’ கிருஷ்ணன் என்று அழைப்பார்கள்.

அதனால் தான் ‘கலகலப்பு’ படத்தில் கூட, சந்தானம் இவரை ‘பேய்’ என கலாய்த்திருப்பார். சினிமாவில் ஃபைட்டராக கரியரை தொடக்கிய ‘பேய்’ கிருஷ்ணன், உடல்நல குறைவு காரணமாக நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 65. அவரது மறைவு குறித்து வேதனையுடன் நினைவுகளை பகிர்கிறார் ஸ்டண்ட் மாஸ்டரும், நடிகருமான ‘தளபதி’ தினேஷ். ரஜினியின் ‘பாட்ஷா’, சுந்தர்.சி.யின் ‘அரண்மனை’ உள்பட பல படங்களின் ஸ்டண்ட் மாஸ்டர் இவர்.

பேய் கிருஷ்ணன் எனும் கோதண்டராமன்

”நான் ஃபைட்டராக இருந்த போது ‘தளபதி’ படத்தின் முதல் சண்டைக் காட்சியில் நான் நடித்திருக்கிறேன். அந்த காட்சியில் ரஜினி சார் என்னை ‘தளபதி’ என அழைப்பார். அதன்பிறகு தினேஷாக இருந்த என்னை தளபதி தினேஷ் என கூப்பிட ஆரம்பித்துவிட்டார்கள். அப்படித்தான் ஃபைட்டராக இருந்த கிருஷ்ணன், ஒரு படத்தில் பேயாக நடித்திருப்பார். அதன் பிறகு அவரை ‘பேய்’ கிருஷ்ணன் என்று கூப்பிட ஆரம்பித்துவிட்டனர். நல்ல மனிதர். அவரது தோற்றம் தான் முரட்டு ஆளாக தெரிவாரே தவிர, மென்மையானவர். திறமையான நடிகர். ஒரு முறை சொன்னாலே, பிடித்துக் கொள்வார். ரிஸ்கான சண்டைக் காட்சிகளில் கூட, எளிதாக செய்து அசத்துவார்.

நான் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்த் படங்களில் கிருஷ்ணனுக்கும் வேலை கொடுத்திருக்கிறேன். சின்ஸியராக செய்வார். ‘கலகலப்பு’க்கு முன்னர் பல படங்களில் நடித்திருக்கிறார். ஆனால், சுந்தர் சி.யின் படத்திற்கு பிறகே அவரை தனி அங்கீகாரம் கிடைத்தது.

சந்தானம், தளபதி தினேஷுடன்..

‘கலகலப்பு’ வெற்றிக்கு பின், ஒரு விபத்து ஒன்றில் அவரது காலில் அடிப்பட்டது. மினி லாரி ஒன்று அவரது காலில் ஏறியதில் நடக்க முடியாமல் அவதிப்பட்டார். அந்த சமயத்தில் அவரை நடிக்கக் கேட்டு வந்த பட வாய்ப்புகள் எதையும் அவரால் பயன்படுத்த முடியாமல் போனது. அவருக்கு விபத்து நேர்ந்திருக்காவிட்டால், சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்திருப்பார். நேரம் கிடைக்கும் போது, அவரை ஸ்டண்ட் யூனியனில் சந்தித்து பேசியதுண்டு. மற்றபடி அவரிடம் தொடர்பில் இல்லை. அவரது மகனும் இப்போது ஃபைட்டராக களம் இறங்கியிருக்கிறார். சமீபத்தில் தான் யூனியனில் அவரும் உறுப்பினர் ஆனார். ‘பேய்’ கிருஷ்ணனின் இழப்பு, வேதனையளிக்கிறது” என்றார் வேதனையுடன் தளபதி தினேஷ்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.