முந்திரிக்காடு டு சந்தனக்காடு : `தமிழ்நாடு விடுதலைப்படை… விடை தேடும் பயணம்’ | பாகம் 1

தமிழ்நாடு விடுதலைப்படை… அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இயங்கிய அமைப்பு. இதன் தலைவராக இருந்தவர் தமிழரசன். இவருக்கு வழிகாட்டியாக இருந்தவர், புலவர் கலியபெருமாள். இவரது வாழ்வைத் தழுவிய கேரக்டர்தான், ‘விடுதலை பாகம் 1’ மற்றும் ‘பாகம் 2’ திரைப்படங்களில் விஜய் சேதிபதி ஏற்றிருக்கும் பெருமாள் வாத்தியார் கேரக்டர். 1980’களில் வட தமிழ்நாட்டில் தமிழரசன் நிறைய இளைஞர்களை வசீகரித்து இந்த அமைப்புக்கு அழைத்து வந்தார். பிற்காலத்தில் இவர்களில் சிலர் சந்தனக் கடத்தல் வீரப்பனுடன் இணைந்தார்கள். இதைத் தொடர்ந்தே, கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திய சம்பவம் நிகழ்ந்தது. அந்த 2000-மாவது ஆண்டில் ஜூனியர் விகடனில் வெளியான தொடர் இது…

ஒரு வருடம் முன்பிருக்கும்….

மலைப்பாதைகளில் ‘ விர்விர்’ரென்று ராணுவ லாரிகள் நகர்ந்து கொண்டிருந்தன. இன்று கன்னட ராஜ்குமாரை சந்தனக் கடத்தல் வீரப்பன் பணயக் கைதியாகப் பிடித்துச் சென்ற அதே தாளவாடி காட்டுப் பகுதி!

செக் – போஸ்டில் நின்றிருந்த போலீஸ் அதிகாரி ஒருவர் கை காட்டி நிறுத்தினார்.

வெளியில் தலையை நீட்டிய ராணுவ அதிகாரியிடம், ” இது வீரப்பன் நடமாட்டமுள்ள ஏரியா.. பார்த்து உஷாரா போகணும் ‘ ‘ என்று ஆங்கிலத்தில் ‘ எச்சரித்தார்.

பளிச்சென்று தமிழில் பதில் வந்தது ரானுவ அதிகாரியிடமிருந்து. ‘ ‘நாங்க மேப் ரீடிங் பயிற்சிக்காக இந்த காட்டுக்குள்ளே போகிறோம்! ஏன்….. ‘ வீரப்பன் சூரப்பன்’னு பீதியைக் கௌப்பறீங்க! நாங்க மிலிட்டரிக்காரங்க! போலீஸ் மாதிரி தைரியமான ஆள் இல்ல சார்! ” தமாஷாகச் சொல்லிவிட்டு ராணுவ அதிகாரி கண்ணடிக்க… போலீஸ் அதிகாரி வயிறு வெடிக்கச் சிரித்தபடியே ராணுவ லாரிகளுக்கு வழி விடுகிறார்.

வனப் பகுதிகளில் ராணுவ லாரிகள் நுழைந்து சென்றன. ஒரு இடத்தில், ‘ சடன் ‘ பிரேக் அடித்து நின்றன. ‘ தொப்…. தொப்பென்று நவீன ரக துப்பாக்கிகளுடன் வீரர்கள் குதித்து இறங்கி ‘ டெண்ட் ‘ அடிக்கத் தொடங்கினார்கள்.

மறுநாள் ஒரு டீம் ‘ மேப் ரீடிங் ‘ பயிற்சிக்கான ஆயத்த வேலைகளில் இறங்க… இன்னொரு டீம்… பாதுகாப்ப வளையம் அமைத்து நின்றது. டெலஸ் கோப் பொருத்தப்பட்ட துப்பாக்கி வழியாக காட்டுப் பகுதிகளை நோட்டம் விட்டுக்கொண்டிருந்த ஒரு வீரர், புதர் பகுதிகளில் மனித நடமாட்டம் தெரிவதைக் கவனித்துவிட்டார். ஒரு பட்டாலியன் ராணுவ ராணுவ வீரர்கள் அந்தச் குறிப்பிட்ட இடத்தை முற்றுகையிட்டனர். நூற்றுக்கணக்கான துப்பாக்கிகள் அந்த இடத்தை நோக்கிக் குறி பார்க்க..

சாதாரண துப்பாக்கிகளைத் தோள்களில் மந்தபடி நான்கு இளைஞர்கள் புதர் பகுதியிலிருந்து வெளியே வந்தனர்.

” யாருடா நீங்க… துப்பாக்கியும் கையுமா எதுக்காக இப்போ இங்கே வந்தீங்க? ” என்று முரட்டுக் குரலில் அதட்டினார் அதிகாரி. ” சார்… நாங்க தமிழ்நாடு விடுதலைப்படை இயக்கத்தைச் சேர்ந்தவங்க. வீரப்பனை அடிக்கடி பார்க்க வருவோம். அப்படித்தான் இப்போ வந்தோம்… ” என்று இளைஞர்கள் திக்கித் திக்கி சொல்லி முடிக்க….

” எந்த ஊருடா நீங்க? ” இது குரலில் பதட்டம் ஏற்றிக்கொண்ட ராணுவ அதிகாரி. ” நாங்க எல்லாம் முந்திரிக்காட்டிலிருந்து வந்தோம் ” என்றனர் ஒரே குரலில்!

முந்திரிக்காடு என்ற வார்த்தையைச் சொல்லும்போதே அந்தத் தலைபோகிற தருணத்திலும் குரலில் ஒரு கம்பீரம்!

! ” எந்த ஊரு முந்திரிக்காடுடா? ” சுதாரித்து நிமிர்ந்த ஒருவன் மளமளவென தயக்கமின்றி பேசத் துவங்கினான்

” கடலூர் மாவட்டம், பெரம்பலூர் மாவட்டம், அரியலூர் மாவட்டம், தஞ்சாவூர் மாவட்டம்… இந்த நாலு மாவட்ட எல்லைப் பகுதிகளையும் இணைக்கிற இடத்துல முந்திரிக்காடு பரந்து விரிஞ்சு கெடக்கு. அதுலதான் நாங்க இருக்கோம். தமிழ் நாட்டுல முப்பது வருஷத்துக்கு முன்னால வெடி குண்டு செய்யற டெக்னிக்கை செய்து காட்டி னாங்க எங்க இயக்கத் தோழர்கள். 87 – ம் வருஷம் அரிபலூர் பாலத்துல வெடிகுண்டு வைத்து மலைக்கோட்டை ரயிலை கவிழ்த்தது எங்க தோழர்கள் தான்… ‘

தோழர்கள்தான்… ‘ ‘ இப்படி அவன் அடுக்கிக்கொண்டே போக,

” போதும் நிறுத்துடா.. உங்க வன்முறை சாதனைகளை ” என்று கத்தியபடி, துப்பாக்கியைத் திருப்பி பேசிய இளைஞனின் முகத்தில் சொத் தென்று இறக்கினார் அதிகாரி.

‘ ஐயோ…! ‘ என்று அலறினான். அதற்குள் மற்ற வீரர்கள் எஞ்சிய மூன்று இளைஞர்களை மிதி மிதியென்று மிதித்தனர்…. பூட்ஸ் கால்களால் புரட்டி எடுத்தனர்.

” தோழர் தமிழரசன் வாழ்க! தனித் தமிழ்நாட்டுக்காக உயிரையும் கொடுப்போம் ” இளைஞர்களின் உதடுகள் மட்டும் முணுமுணுத்துக்கொண்டிருந்தன. அவர்கள் அரை மயக்கமாகச் சரிந்து கிடந்தனர்.

ரத்தம் சொட்டச் சொட்ட இளைஞர்களை கொத்தாக தூக்கிச் சென்றனர் ராணுவ வீரர்கள்.

‘ வீரப்பன் காட்டில் நடமாடிய தமிழ்நாடு விடுதலைப்படை தீவிரவாதிகள் கைது ‘ என்று பத்திரிகைகளில் சில நாட்களுக்குப் பின் செய்தி வந்தது.

அந்த இளைஞர் களைப் பிடித்த அதிகாரி, பயிற்சி முகாமின் ‘ டெண்ட் ‘ வாசலில் ஒரு கட்டிலில் உட்கார்ந்திருந் பத்திரிகை செய்தியைப் படித்தபடி கோப்பையை உறிஞ்சினார். கோபபையை வைத்து விட்டு திரும்பினார். அருகிலிருந்த ராணுவ வீரர்களைப் பார்த்து….

” நான் தமிழ்காரன் என்பது மட்டும்தானே உங்களுக்குத் தெரியும். எனது சொந்த ஊர் இதோ பேப்பர்ல போட்டிருக்கே… அந்த பெரம்பலூர் மாவட்டம்தான்! இவங்க சொன்ன அதே முந்திரிக்காட்டு ஓரமாத்தான் எனது சொந்தக் கிராமம். நான் ராணுவத்தில் சேர்ந்து அதிகாரியாயிட்டேன். அந்த இடத்தில் பிறந்த பசங்கள்  இப்படிப் பாதைமாறிப் போயிருக்காங்க. எவ்வளவு வளமான பூமி!

சம்திங் ராங்… முப்பது வருஷம் வடக்கே நான் டியூட்டி பார்க்கப்போயிட்டேன். அந்த பூமிக்கு ஏதோவொரு சாபக்கேடு நேர்ந்திருக்கு” கசப்புடன் சொன்னார் அதிகாரி.

உண்மைதான்! செழிப்பான அந்த புன்செய் பூமிக்கு சாபக்கேடுதான். கடின உழைப்பையும் ஏராளமான வியர்வையையும் வாங்கிக்கொண்டுதான் பலனைக் கொடுக்கும் அந்த பூமி. வருஷத்துக்கு ஒரு போகம்தான் விளையும். வரகு, தினை, சோளம் இப்படி தானியப்பயிர் விளைந்தது ஒரு காலம்… நான்கு மாதம் ஏதோ வெந்ததைத் தின்று போய்க்கொண்டிருக்கும் வாழ்க்கை. மீதி எட்டு மாதங்கள் வறுமையும் பட்டினியும்தான் சாஸ்வதம்!

நூறு வருடங்களுக்கு முன் பிரிட்டிஷ் அரசாங்கம் உடையார்பாளையம் ஏரியாவில் முந்திரிச்செடிகளை அறிமுகப்படுத்தியது. இந்த கறட்டு செம்மண் பூமியில் முந்திரி நன்றாய் கிளைத்து வளர்ந்து விளைச்சல் கொடுத்தது. வரகிலும் தினையிலும் கிடைத்ததைவிட வருமானம் இதில் அதிகம். இது இந்தப் பகுதி மக்களை ஈர்க்க உடையார்பாளையத்திலிருந்து கவரப்பாளையம் வரை முந்திரிக்காடு பரந்து விரிந்தது.

முப்பது ஆண்டுகளுக்கு முன்னர்தான் இந்தப் பகுதியில் ஜெயங்கொண்டத்திலிருந்து சேத்தியாதோப்பு வரை பூமிக்கடியில் பழுப்பு நிலக்கரி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதே போல் அரியலூரிலிருந்து செந்துரை வரை சிமெண்ட் தயாரிக்க உதவும் சுண்ணாம்புப் பாறைகள் இருப்பதும் தெரிந்தது. தனியார் துறையில் ஒரு பெரிய நிலக்கரிச் சுரங்கமும், அனல்மின் நிலையமும் ரெடியாகிறது. ஐந்து சிமெண்ட் ஃபாக்டரிகள் வந்து விட்டன.

வளமான எதிர்காலம் கனவினில் விரிய, இந்த ஃபாக்டரிகளுக்காக பலர் தங்கள் நிலங்களை விற்றார்கள். இருநூறு கிராமங்கள் இப்படி ஒட்டுமொத்தமாய் இந்த நிறுவனங்கள் வசம் போயின.

நிலம் கொடுத்தால் நிரந்தரமாக வேலை உண்டு என்று எதிர்பார்த்தவர்களுக்குக் கிடைத்ததெல்லாம் சாதாரண தினக்கூலி வேலைதான். எங்கெங்கோ இருந்து வந்து வேலையில் சேர்ந்த அதிகாரிகள் இவர்களை மிரட்டி வேலை வாங்கினார்கள். மூலதனமான நிலததையும் இழந்து, அந்த நிலத்தின் மேலேயே நின்றுகொண்டு ஃபாக்டரி அடிமைகளாக கூலி வேலை செய்யவேண்டிய கொடுமை.

வரப்பு தகராறுக்கேகூட அரிவாளால் பேசுகிறவர்களின் வாரிசுகள் அதே கோபத்தோடு வளர்ந்தார்கள். அவர்கள் கோபம் வரப்பைத் தள்ளிப்போட்ட பக்கத்து நிலத்துக்காரன் மேல் பாயாமல் தங்கள் வாழ்க்கையைத் தள்ளிப்போட்ட அரசின் மீதும் பெரிய முதலாளிகள் மீதும் திரும்பியது. தங்கள் பூமியின் கனிமங்களைச் சுரண்டிவிட்டு தங்கள் வாழ்க்கையை இருட்டாக்கிவிட்டதாய் நினைத்தார்கள்.

யாரோ சுரண்டவில்லை. இந்தியா தங்களைச் சுரண்டுகிறது. தமிழ்நாடு தமிழருக்கே என்ற நிலை வந்தால் வளமான தான் இதற்கெல்லாம் விடிவுக்காலம். அதனால் இந்தியாவிடமிருந்து தமிழ்நாட்டுக்கு விடுதலை வேண்டும் என்கிற ரீதியில் சிந்திக்கத் தொடங்கினார்கள்.

படித்து வேலையற்று இருந்த இளைஞர்களின் வெற்று மனதில் இந்த விபரீதச் சிந்தனை புகுந்தது முதல் இந்த ஏரியாவே மாறி விட்டது. முந்திரிப்பழத்தை முந்திக்கொண்டு அதன் கொட்டை நீட்டிக்கொண்டு வளர்ந்து விடுவதைப் போல் இந்த ஆக்ரோஷ இளைஞர் கும்பலும் அரசாங்கத்தையும் சட்டங்களையும் தாண்டிக் கொண்டு தனி ராஜாங்கம் அமைக்கத் துடித்தது.

இந்த சிந்தனையால் ஈர்க்கப்பட்டவர்கள், இவர்களால் மூளைச்சலவை செய்யப்பட்டவர்கள் பலரும் வீடுகளை மறந்தார்கள். தாய் – தந்தை, கூடப்பிறந்த உறவுகள் என்று எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டார்கள். மீசை முடி கறுத்து தடிக்கும் பருவத்தில் முந்திரிக்காடுகளுக்குள் அடைக்கலம் புகுந்தார்கள். காடுகளுக்குள் சில ஒற்றையடிப் பாதைகளை ஏற்படுத்திக்கொண்டார்கள். மறைவிடங்கள் உருவாகின.

போலீஸ், பொதுமக்கள் என்று யார் கண்ணிலும் படாமல் நாள்  கணக்கில் காடுகளுக்குள் வாழ்க்கை போனது.

நெருப்பு தடவிய சிந்தனை… திராவகம் உமிழும் பேச்சு! தீவிரவாத சித்தாந்தம் அங்கே தளர் நடை போடத்துவங்கி மளமளவென ராட்சத உருவெடுத்தது. விரக்தியின் விளிம்புக்குப் போய் ஆயுதத்தை அரவணைத்துக்கொண்டார்கள்.

முட்ட முழுக்க திசைமாறிப்போன இவர்கள் சாதித்ததுதான் என்ன? விடை தேடிக் கிளம்பினோம்.

பெரம்பலூர் மாவட்டம் ஆண்டிமடத் திலிருந்து இடையக்குறிச்சி போகும் ரோடு… இருபக்கமும் நெருக்கமாய் முந்திரிக்காடுகள்.

தயாராகக் காத்திருக்கும் ஒரு உள்ளூர் கும்பல் நம் வாகனத்தைக் கைகாட்டி நிறுத்துகிறது! “ யார் நீங்கள்? இந்த வழி அவ்வளவாய் இரவுப் பயணத்துக்குப் பாதுகாப்பானதில்லை ” என்றவர்களிடம் நாம் விடை தேடி வந்த கதையைச் சொன்னோம்.

சில நொடிகள் மௌனம் காத்தவர்களில் ஒருவர் ‘ பட்’டென்று மௌனத்தை உடைத்தார். ” என்னவென்று சொல்ல… ஒரு தலைமுறையே ‘ ஒட்டு மொத்தமாகத் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு நிற்கிறது. தீவிரவாதத்தின் பின்னால் போனவர்களை ஒருபுறம் போலீஸ் துரத்தியது. இன்னொருபுறம் போலீஸுக்குப் பயந்து தீவிரவாத அமைப்பை விட்டு விலகினாலோ… அவர்களை அந்த அமைப்பினரே கொலைவெறியோடு துரத்தினர். இந்த மோதல்களால் செத்தவர்கள் தான் எத்தனை பேர். ரத்தமும் சதையுமான தங்கள் உறவுகளை இழந்துவிட்டு தவிப்பவர்கள் எத்தனை பேர்? கீழ் குவாகம் ராமசாமியைத் தெரியுமா? தலைவேறு உடல் வேறாய் அவர் சிதைந்த கதை தெரியுமா? இரண்டு பிஞ்சுக் குழந்தைகளுடன் கஞ்சிக்கே வழியில்லாமல் பரிதவிக்கும் ராமசாமியின் மனைவி ராணியைப் போய்ப் பாருங்கள்.. உங்களுக்குப் பதில் கிடைக்கும் ” என்கிறார் அவர்.

இதோ ராணி பேசுகிறார்.

மேலும் சலசலக்கும்..!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.