“ஆளும் கட்சி எம்.பி.க்கள் மூவர் ராகுல் காந்தியை தாக்கினர்” – மக்களவை சபாநாயகருக்கு காங்கிரஸ் தலைவர்கள் கடிதம்

புதுடெல்லி: ஆளும் கட்சியைச் சேர்ந்த 3 எம்பிக்கள் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை உடல் ரீதியாக தாக்கியதாக காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இது தொடர்பாக கே.சி.வேணுகோபால், கே.சுரேஷ், மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட எம்.பி.,க்கள் எழுதியுள்ள கடிதத்தில், “அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலையில் இருந்து மகர் துவார் வரை காங்கிரஸ் எம்.பி.க்கள் அமைதியான முறையில் பேரணி நடத்தினர்.

இதையடத்து நாங்கள் மகர் துவார் வழியாக நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்றபோது, ​​ஆளும் கட்சியைச் சேர்ந்த எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்த எங்களை உள்ளே நுழைய விடாமல் தடுத்தனர். எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை ஆளும் கட்சியைச் சேர்ந்த மூன்று எம்.பி.க்கள் உடல்ரீதியாக தாக்கினர். இதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறோம்.

இது எதிர்க்கட்சித் தலைவருக்கு வழங்கப்பட்ட சிறப்புரிமைகளை மீறுவதாகவும், எம்.பி. என்ற முறையில் அவருக்கு வழங்கப்பட்ட உரிமைகளை மீறுவதாகவும் உள்ளது. ராகுல் காந்தியின் தனிப்பட்ட கண்ணியத்தின் மீதான அப்பட்டமான தாக்குதல் இது. அதோடு, நமது நாடாளுமன்றத்தின் ஜனநாயக உணர்விற்கு எதிரானது. இந்த விஷயத்தை நீங்கள் மிகவும் தீவிரமாகக் கையாள்வீர்கள் என்றும் தகுந்த நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, நாடாளுமன்றத்தில் நடந்த போராட்டத்தின் போது பாஜக எம்.பி.,க்களால் தான் தாக்கப்பட்டதாகவும், எனவே இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

அவர் தனது கடிதத்தில், “கடந்த 17ம் தேதி மாநிலங்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அம்பேத்கரை அவமதித்ததைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் இண்டியா கூட்டணி எம்.பி.,க்கள் சார்பில் கண்டன பேரணி நடத்தப்பட்டது. அம்பேத்கர் சிலை உள்ள இடத்தில் இருந்து மகர் துவார் வரை நாங்கள் பேரணியாகச் சென்றோம்.

நான் இண்டியா கூட்டணி எம்.பி.,க்களுடன் சேர்ந்து மகர் துவாரை அடைந்தபோது பாஜக எம்பிக்களால் தள்ளப்பட்டேன். அதன்பிறகு, நான் என் சமநிலையை இழந்து மகர் துவாரின் முன் தரையில் உட்கார வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஏற்கனவே அறுவை சிகிச்சை செய்து கொண்ட எனது முழங்கால்களில் இதனால் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, காங்கிரஸ் எம்.பி.,க்கள் நாற்காலியைக் கொண்டு வந்து, அதில் என்னை உட்கார வைத்தனர். மிகுந்த சிரமத்துடனும், எனது சக ஊழியர்களின் ஆதரவுடனும் காலை 11 மணிக்கு நான் சபைக்கு வந்தேன்.

இது தனிப்பட்ட முறையில் என் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மட்டுமல்ல, மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் காங்கிரஸ் தலைவர் மீதான தாக்குதலாகவே கருதுகிறேன். எனவே இந்த சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என தெரிவித்திருந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.