பெங்களூரு,
அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கூறிய கருத்துகளுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அம்பேத்கரை அமித்ஷா இழிவுபடுத்தியதாகச் சொல்லி போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், கர்நாடக சட்டசபையிலும் இது தொடர்பாக விவாதம் நடந்தது. அப்போது, பா.ஜ.க. மாநில தலைவரும், மேலவை உறுப்பினருமான சி.டி.ரவி, ராகுல்காந்தியை விமர்சித்து பேசினார். இதற்கு மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி லட்சுமி ஹெபால்கர் பதிலடி கொடுத்தார். அப்போது, பெண் மந்திரியை நோக்கி சி.டி.ரவி, அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து லட்சுமி ஹெபால்கர், அவைத்தலைவரிடம் புகார் அளித்தார். மேலும், இவ்விவகாரம் குறித்து போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது.
அதன் பேரில், சி.டி.ரவி மீது புதிய சட்டப்பிரிவு 75 மற்றும் 79 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சி.டி.ரவியை போலீசார் கைது செய்ய முற்பட்டனர். அதற்கு சி.டி.ரவி மறுப்பு தெரிவித்ததால், சட்டசபை வளாகத்தில் வைத்தே குண்டுக்கட்டாக அவரை போலீசார் கைதுசெய்தனர். இதனால் சட்டசபை வளாகம் பரபரப்புடன் காணப்பட்டது.